தாய்லாந்தின் புகெட்டிலிருந்து தில்லி வர வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் 80 மணி நேரமாக அங்கேயே சிக்கித் தவித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்தின் புகெட்டிலிருந்து நவம்பர் 16 அன்று இரவு ஏர் இந்தியா விமானம் சுமார் 100-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தில்லிக்குப் புறப்பட வேண்டியது. ஆனால், பயணிகள் கூறியதுபடி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் 6 மணி நேரம் தாமதம் என ஏர் இந்தியா ஊழியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் நீண்ட நேரம் காக்கவைத்து விமானத்துக்குள் அனுப்பினார்கள். விமானத்துக்குள் ஏறியவுடன் மீண்டும் கீழே இறங்கச் சொன்னதாகப் பயணிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விமானம் இறுதியில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, பயணிகளுக்குத் தங்கும் வசதி மற்றும் உணவு ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. சில பயணிகள் மாற்று விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், சிலர் விமானம் ரத்து செய்யப்பட்டதற்கு முழுக் கட்டணத்தையும் திரும்பப் பெற்றுக்கொண்டதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, மீண்டும் இதே விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்படாமலே இருந்துள்ளது. இது சரி செய்யப்பட்டவுடன் விமானம் அங்கிருந்து புறப்பட்டுள்ளது. ஆனால், விமானம் புறப்பட்டு இரண்டரை மணி நேரம் ஆன பிறகு, மீண்டும் புகெட்டில் தரையிறங்கியது. மீண்டும் தொழில்நுட்பம் என்றே ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதிலிருந்து பயணிகள் புகெட்டிலேயே சிக்கித் தவித்து வருகிறார்கள்.
ஏர் இந்தியா நிறுவனத்திடமிருந்து திருப்திகரமான பதில்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என பயணிகள் சமூக ஊடகங்களில் குற்றம்சாட்டியுள்ளார்கள்.
ஏர் இந்தியா விமானத்துக்கு நெருங்கிய வட்டாரம் என்டிடிவி செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "நிறைய பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள். புகெட்டில் இன்னும் 40 பேர் இருக்கிறார்கள். இவர்கள் இன்று மாலை திருப்பி அனுப்பப்படுவார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.