
அஹமதாபாதிலிருந்து லண்டன் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் 159 ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
விமானம் இல்லாத காரணத்தால் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் ஏர் இந்தியா விமானம் 159 ஆக அஹமதாபாதிலிருந்து லண்டன் செல்லவிருந்தது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.10 மணிக்கு விமானம் புறப்படும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. பிறகு, விமானத்தின் புறப்படும் நேரம் பிற்பகல் 3 மணிக்கு மாற்றப்பட்டது. இதனிடையே, பிற்பகல் 1.45 மணிக்கு விமானம் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்தது. விமானம் இல்லாத காரணத்தாலே ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தொழில்நுட்பப் பிரச்னைகள் எதுவும் ரத்து செய்யப்படுவதற்கான காரணம் இல்லை என்றும் ஏர் இந்தியா விளக்கமளித்துள்ளது.
அதாவது இந்த விமானம் அஹமதாபாத் விமான நிலையத்தை வந்தடைந்திருக்க வேண்டும். பல்வேறு காரணங்களால், முந்தையப் பயணத்தை முடித்துக்கொண்டு சம்பந்தப்பட்ட விமானம் அஹமதாபாத் வந்தடையவில்லை. இதன் காரணமாகவே விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளுக்கு தங்கும் விடுதிகள் ஏற்பாடு, மாற்றுப் பயணத் திட்டங்கள், முழுக் கட்டணமும் திருப்பிச் செலுத்தப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இதே விமானம் லண்டனிலிருந்து அம்ரித்சர் வரவிருந்தது. அதுவும் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
கடந்த வாரம் தான் இதே வழித்தடத்தில் அஹமதாபாதிலிருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம் ஏஐ 171 விபத்துக்குள்ளானது. இதே வழித்தடத்தில் பயணம் மேற்கொள்ளவிருந்த விமானம் தான் இன்று ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதுவும் ஏர் இந்தியாவின் ட்ரீம்லைனர் விமானம் தான்.