ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி இந்தியாவில்தான் உள்ளது: ராம் மோகன் நாயுடு

விபத்தில் கருப்புப்பெட்டி கடுமையாக சேதமடைந்ததால், அதனை ஆய்வுக்காக அமெரிக்காவுக்கு அனுப்பியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி இந்தியாவில்தான் உள்ளது: ராம் மோகன் நாயுடு
ANI
1 min read

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி இந்தியாவில்தான் உள்ளது என்றும், அதில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களைத் திரட்டுவதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என்றும், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 12 அன்று குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் இருந்து லண்டனை நோக்கிக் கிளம்பிய ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் ரக விமானம், புறப்பட்ட ஓரிரு நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் இந்த விபத்தில் உயிரிழந்தனர். அத்துடன், விமானம் மோதிய பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியைச் சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள் உள்பட விமானத்தில் பயணிக்காத 33 பேர் உயிரிழந்தனர்.

இந்த விமான விபத்து நடைபெற்ற 24 மணிநேரம் கழித்தே, விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டறியப்பட்டது. எனினும், விபத்தில் கருப்புப்பெட்டி கடுமையாக சேதமடைந்ததால், அதனை ஆய்வுக்காக அமெரிக்காவுக்கு அனுப்பியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம் பூனேவில் நடைபெற்ற 7-வது ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய ரக விமானங்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு கலந்துகொண்டார்.

அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கருப்புபெட்டி குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, `அது இந்தியாவில்தான் உள்ளது’ என்றார்.

`கருப்புப் பெட்டி பதிவு எப்போது அரசாங்கத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், `அது மிகவும் தொழில்நுட்ப ரீதியான விஷயம், விமான விபத்து விசாரணை பணியகம் அந்த பணியில் ஈடுபட்டு வருகிறது. நான் எந்த அழுத்தத்தையும் கொடுக்க விரும்பவில்லை. அவர்கள் முழுமையான செயல்முறையை மேற்கொள்ளட்டும்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in