
அஹமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்திற்கான காப்பீட்டுத் தொகையாக சுமார் 475 மில்லியன் டாலர், அதாவது ரூ. 3940 கோடி கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா விமான விபத்திற்கான காப்பீடு தொடர்பாக இந்திய பொது காப்பீட்டுக் கழகத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராமசாமி நாராயணன் ப்ளூம்பெர்க் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், `இந்த விமான விபத்திற்கான காப்பீட்டுக் கோரிக்கை இந்திய வரலாற்றில் மிகப்பெரியதாக இருக்கலாம்’ என்றார்.
விமானத்தின் ஓடு மற்றும் எஞ்சினுக்கான காப்பீட்டுத் தொகை சுமார் 125 மில்லியன் டாலர், அதாவது ரூ. 1044 கோடியாக இருக்கும் என்று அவரது கணக்கீட்டின்படி மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் மற்றும் பிறரின் உயிரிழப்புக்கான காப்பீட்டுத் தொகை சுமார் 350 மில்லியன் டாலர், அதாவது ரூ. 2923 கோடியாக இருக்கும் என்றும் அவர் மதிப்பிட்டுள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு காப்பீடு வழங்கிய நிறுவனங்களில், இந்திய பொது காப்பீட்டுக் கழகமும் ஒன்றாகும்.
ப்ளூம்பெர்க் தொகுத்த தரவுகளின்படி, 2023-ம் ஆண்டில் இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கான வருடாந்திர பிரீமியம் தொகையைவிட, ஏர் இந்தியா விபத்திற்காக பெறப்படவுள்ள இந்த காப்பீட்டுத் தொகை மூன்று மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்த விபத்து உலகளாவிய விமானக் காப்பீடு மற்றும் மறுகாப்பீட்டுச் சந்தையை கடுமையாக பாதிக்கும் என்றும் ப்ளூம்பெர்க் செய்தியில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இது இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்களுக்கான காப்பீட்டை அதிக விலை கொண்டதாக மாற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்ட்ரியல் மாநாடு விதிகளின்படி, விமான விபத்தில் உயிரிழக்கும் ஒரு பயணியின் குடும்பத்தினருக்கு குறைந்தபட்சம் சுமார் ரூ. 1.26 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே டாடா நிறுவனம் பயணி ஒருவருக்கு ரூ. 1 கோடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த தொகை மேலும் உயர்த்தி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.