
அஹமதாபாத்தில் நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த 40 வயதான பிரிட்டன் வாழ் இந்தியரான விஸ்வாஷ் குமார் ரமேஷ், தான் எப்படி உயிர் பிழைத்தேன் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று தூர்தர்ஷனுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அஹமதாபாத் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஸ்வாஷ் குமாரை இன்று (ஜூன் 13) காலை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார்.
இதைத் தொடர்ந்து தூர்தர்ஷனுக்கு அவர் அளித்த பேட்டியில் `எப்படி உயிருடன் வெளியே வந்தேன் என்பது தெரியவில்லை’ என்று கூறினார்.
`ஒரு கட்டத்தில், நான் இறக்கப்போகிறேன் என்றுதான் நினைத்தேன். ஆனால் கண்களைத் திறந்தபோது, நான் உயிருடன் இருப்பதைக் கண்டேன். என் சீட் பெல்ட்டைத் விடுவித்து அங்கிருந்து வெளியேறினேன். விமானப் பணிப்பெண் மற்றும் அத்தை மாமா என அனைவரும் என் கண் முன்பாகவே இறந்துவிட்டார்கள்’ என்றார்.
விஸ்வாஷ் குமார் அமர்ந்திருந்த இருக்கையான 11A, அவசரகால கதவுக்கு அடுத்ததாக இருந்தது. விமானம் விடுதி மீது மோதியதும் அந்த கதவு தானாகவே கழன்று விழுந்ததாகத் தெரிகிறது.
விடுதி மீது அவர் இறங்கினாரா என்று நெறியாளர் கேட்டதற்கு, `இல்லை, நான் தரைக்கு அருகில் இருந்தேன், அங்கு போதிய இடம் இருந்தது. அதனால் நான் அங்கிருந்து வெளியே வந்தேன். கட்டடத்தின் சுவர் எதிர் பக்கத்தில் இருந்தது, அந்த பக்கத்தில் இருந்த யாராலும் வெளியே வர முடியவில்லை என்று நினைக்கிறேன்’ என்றார்.
விபத்து எப்படி நடந்தது என்று நெறியாளர் கேட்டதற்கு, `புறப்பட்ட ஒரு நிமிடத்தில், விமானத்தில் கோளாறு ஏற்பட்டதைப்போல் உணர்ந்தேன். பின்னர் பச்சை மற்றும் வெள்ளை விளக்குகள் எரிந்தன. அவர்கள் (விமானிகள்) விமானத்தை உயர்த்த முயன்றனர், ஆனால் அது முழு வேகத்தில் சென்று கட்டடத்தின் மீது மோதியது’ என்றார்.