விபத்து இழப்பீடு பெற கடுமையான விதிமுறைகள்: ஏர் இந்தியா மீது குற்றச்சாட்டு!

பின்பற்றவேண்டிய சில அடிப்படையான செயல்முறைகள் உள்ளன, ஆனால் குடும்பங்களுக்குத் தேவையான நேரத்தை நாங்கள் வழங்குகிறோம்.
விபத்து இழப்பீடு பெற கடுமையான விதிமுறைகள்: ஏர் இந்தியா மீது குற்றச்சாட்டு!
ANI
1 min read

அஹமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இழப்பீட்டுத் தொகையைப் பெற ஏர் இந்தியா நிறுவனம் கடுமையான விதிமுறைகளை பின்பற்றியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, இழப்பீடு கோரும் விண்ணப்பத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களின் நிதி நிலைமை குறித்த விவரங்கள் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஜூன் 12 அன்று, குஜராத் மாநிலம் அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனை நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஓடுபாதையில் இருந்த கிளம்பிய சில வினாடிகளிலேயே விபத்துக்குள்ளானது. இதில் பயணி ஒருவரைத் தவிர, விமானத்திற்குள் இருந்த பணியாளர்கள், விமானிகள், பயணிகள் என 241 உயிரிழந்தனர்.

இந்த விபத்தைத் தொடர்ந்து, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி இழப்பீடாக வழங்கப்படும் என்றும், இடைக்கால நிவாரணமாக முதலில் ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்தது.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இழப்பீடு பெறுவதற்காக ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட படிவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இழப்பீடுகோரும் படிவத்தில், உயிரிழந்த பயணியின் பணி குறித்த விவரங்கள், அதாவது பயணி பணியாற்றிய நிறுவனத்தின் பெயர், அதன் தொலைபேசி எண், முகவரி போன்ற விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. மேலும், உயிரிழந்தவர் சுய தொழிலில் ஈடுபட்டிருந்தாரா என்ற கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்த பயணியின் குடும்பத்தினர் பகிர்ந்துகொள்ளும் தகவல்களைப் பொறுத்தே இழப்பீட்டுத் தொகை அமையும் என்று படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

`படிவம் மூலம் பெறப்படும் தகவல்கள், ஒரு பயணியின் மரணத்தை ஒட்டி வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையின் முன்பணத்தை செலுத்துவதிலும், இறுதி இழப்பீட்டைத் தீர்மானிப்பதிலும் ஏர் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு உதவும்’ என்று படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சர்ச்சை குறித்து விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஏர் இந்தியா நிறுவனம், `பின்பற்றவேண்டிய சில அடிப்படையான செயல்முறைகள் உள்ளன, ஆனால் குடும்பங்களுக்குத் தேவையான நேரத்தை நாங்கள் வழங்குகிறோம். எங்களால் முடிந்த அளவுக்கு ஆதரவளிக்க விரும்புகிறோம்’ என்று கூறியுள்ளது.

குறிப்பாக, உயிரிழந்தவர்களின் குடும்ப உறவுகளைச் சரி பார்ப்பதும், இடைக்கால தொகை முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்வதும் மட்டுமே இந்த படிவத்தின் நோக்கம் என்று ஏர் இந்தியா தெளிவுபடுத்தியது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in