
ஆபரேஷன் சிந்தூரின்போது ஐந்து பாகிஸ்தான் போர் விமானங்களையும், வான்வழி கண்காணிப்புக்காக வடிவமைக்கப்பட்ட மற்றொரு விமானத்தையும் தரையில் இருந்து வானில் ஏவப்பட்ட ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தியதாக இந்திய விமானப்படையின் (IAF) தலைமைத் தளபதி ஏ.பி. சிங் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற ஏர் சீஃப் மார்ஷல் எல்.எம். கட்ரே சொற்பொழிவில் கலந்துகொண்டு விமானப்படையின் தலைமைத் தளபதி பேசினார்.
மே 10 அன்று பாகிஸ்தானின் ராணுவ தளங்களை இந்தியா குறிவைத்தபோது ஜகோபாபாத் விமான தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட சில எஃப்-16 போர் விமானங்களும் அழிக்கப்பட்டதாக அவர் தகவல் தெரிவித்தார்.
விமானப்படை தளங்கள் மீதான இந்தியாவின் இந்த தொடர் தாக்குதல், மூன்று நாள்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற பரஸ்பர தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவை போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு அழைக்க பாகிஸ்தானை கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் விமானப்படைக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவை பாதுகாப்புப் படையின் தளபதி ஒருவர் பகிரங்கமாக வெளிப்படுத்தியது இதுவே முதல் முறை.
எதிரி நாட்டின் வான் பரப்புக்குள் இலக்குகளை தாக்கி அழித்ததற்காக ரஷ்ய தயாரிப்பான எஸ்-400 ட்ரையம்ஃப் வான் பாதுகாப்பு அமைப்பை விமானப்படை தளபதி பாராட்டினார், குறிப்பாக அதை `கேம் சேஞ்சர்’ என்று அவர் அழைத்தார்.
`நாங்கள் சமீபத்தில் வாங்கிய எஸ்-400 அமைப்பு, கேம் சேஞ்சராக இருந்து வருகிறது. அந்த அமைப்பின் வீச்சால் நீண்ட தூர சறுக்கு குண்டுகளைப்போல அவர்களின் விமானங்களும் விலக்கி வைக்கப்பட்டன. அந்த அமைப்பை ஊடுருவ முடியாததால் அவர்களால் அவற்றில் எதையும் பயன்படுத்த முடியவில்லை’ என்றார்.