மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்த விமானம்: நடந்ததை விவரிக்கும் மருத்துவர்கள்!

"இடிபாடுகளுக்கு மத்தியிலிருந்து 4-5 உடல்களை மீட்டோம். அவர்கள் அனைவரும் மருத்துவர்கள்..."
மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்த விமானம்: நடந்ததை விவரிக்கும் மருத்துவர்கள்!
ANI
1 min read

குஜராத் மாநிலம் அஹமதாபாத் விமான நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நொடிகளிலேயே விழுந்து வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இந்த விமானம் பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவர்களின் 5 மாடி கட்டட குடியிருப்புப் பகுதிக்குள் விமானம் விழுந்துள்ளது. எனவே, விமானத்தில் பயணித்தவர்கள் மட்டுமில்லாமல் மருத்துவக் கல்லூரி வளாகத்திலிருந்த சிலரும் உயிரிழந்துள்ளார்கள். மருத்துவக் கல்லூரி வளாகத்திலிருந்து மருத்துவர்கள் உள்ளிட்டோர் விமானம் விழுந்த தருணம் மற்றும் பாதிப்புகள் குறித்து விவரித்துள்ளார்கள்.

மருத்துவர் ராமகிருஷ்ணா என்பவர் இதிலிருந்து தப்பியுள்ளார். அவர் கூறுகையில், "நான் மெஸ்ஸில் உணவருந்திக் கொண்டிருந்தேன். ஒரு விமானம் அபாயகரமாக மிகவும் கீழாகப் பறந்துகொண்டிருக்கிறது என நண்பர் ஒருவர் என்னை எச்சரித்தார். நான் மெஸ்ஸிலிருந்து வெளியே வந்தவுடன், மிகப் பெரிய அளவில் வெடிப்பு நிகழ்ந்தது. நிறைய வெப்பம் மற்றும் புகை சூழ்ந்திருந்தன. மக்கள் அச்சத்தில் ஓடிக் கொண்டிருந்தார்கள். சூழ்ந்திருந்த புகை தணிந்த பிறகு, இடிபாடுகளைப் பார்வையிட்டேன். இடிபாடுகளுக்கு மத்தியிலிருந்து 4-5 உடல்களை மீட்டோம். அவர்கள் அனைவரும் மருத்துவர்கள்" என்றார்.

ஜூனியர் மருத்துவர்கள் சங்கத் தலைவர் தவல் கமேடி கூறுகையில், "பிற்பகல் 1.41 மணிக்கு புகை சூழ்ந்திருப்பதாக எனக்கு அழைப்பு வந்தது. லேசான தீ விபத்தாக இருக்கும் என நினைத்தேன். ஆம்புலன்ஸுக்காக சிவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ராகேஷ் ஜோஷியை அழைத்தேன். நாங்கள் அந்த இடத்தைச் சென்றடையும்போது, ஏர் இந்தியாவின் நான்கு ஆம்புலன்ஸ்கள் ஏற்கெனவே அங்கு வந்திருந்தன. அங்கு சென்ற பிறகு தான் நிலைமை மோசமானது என்பதை உணர்ந்தோம். 21-22 மாணவர்களை நாங்கள் மீட்டோம்" என்று கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

பயிற்சி பெறுபவராக இருக்கும் குஷால் சௌஹான் விபத்து நிகழ்ந்த மெஸ்ஸில் உணவருந்திய பிறகு மாணவர்கள் விடுதிக்குச் சென்றுள்ளார். இவர் கூறுகையில், "விமானம் சில நிமிடங்கள் தாமதமாக விபத்துக்குள்ளாகியிருந்தால், இன்னும் பல மருத்துவர்கள் விபத்தில் சிக்கியிருக்கக்கூடும். பெரும்பாலான மருத்துவர்கள் வெளிநோயாளிகள் பிரிவை முடித்துவிட்டு, பிற்பகல் 2 மணிக்கு தான் உணவருந்த வருவார்கள்" என்றார்.

இந்த விபத்தில் மூன்று மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு மருத்துவரின் கர்ப்பிணி மனைவியும் இதில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மருத்துவக் கல்லூரி வளாகத்தைச் சேர்ந்தவர்களின் உயிரிழப்பு விவரம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in