
குஜராத் மாநிலம் அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து விமானப் பணியாளர்கள் உள்பட 142 பேருடன் லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI-171 பயணிகள் விமானம் இன்று (ஜூன் 12) விபத்துக்குள்ளானது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கு மையத்துடன் விபத்துக்குள்ளான விமானம் தொடர்பை இழப்பதற்கு முன்பு, விமானி சுமித் சபர்வால், `மே டே’ அழைப்பு விடுத்ததாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது.
மே டே அழைப்பு என்றால் என்ன?
மே டே அழைப்பு (May Day Call) என்பது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட துயர சமிக்ஞையாகும். விமானம் மற்றும் கப்பல் பயணங்களில் உயிருக்கு ஆபத்தான அவசர நிலை ஏற்படும்போது, அத்தகைய சூழ்நிலையை குறிக்க இந்த வாக்கியம் பயன்படுத்தப்படும்.
ஆபாயகரமான சூழலைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் இந்த `மே டே’, பிரெஞ்சு சொற்றொடரான `மைடர்’ என்பதில் இருந்து உருவானது. இதன் பொருள் `எனக்கு உதவுங்கள்’.
இந்த வாக்கியம் முதன்முதலில் 1920-களில் பயன்பாட்டிற்கு வந்தன. ஆபத்து காலங்களில் இந்த வாக்கியத்தைப் பயன்படுத்துவது, தற்போது உலகளவில் பின்பற்றப்படும் நெறிமுறைகளின்படி அமலில் உள்ளது.
`மே டே, மே டே, மே டே’ என்று எப்போதும் தொடர்ச்சியாக மூன்று முறை இந்த அழைப்பு விடுக்கப்படும். சத்தம் குறைவான நேரங்களில் அல்லது மோசமான வானொலி ஒலிபரப்புகளிலும்கூட தெளிவாகப் புரிந்துகொள்வதை உறுதிசெய்ய, இவ்வாறு மூன்று முறை அழைப்பு விடுக்கப்படுகிறது.
இந்த `மே டே’ அழைப்பு பொதுவாகவே சம்மந்தப்பட்ட விமானம் அல்லது கப்பலை இயக்கும் கேப்டனால் விடுக்கப்படும். குறிப்பாக எஞ்சின் செயலிழப்பு, தீ விபத்து, பாதுகாப்பை அச்சுறுத்தும் சூழல் போன்ற காரணங்களுக்கான அந்த அழைப்பு விடுக்கப்படுவது வாடிக்கையாகும்.