
அஹமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் இதுவரை 47 பேருடைய உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அஹமதாபாதிலிருந்து கடந்த வியாழக்கிழமை லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பிஜே மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தார்கள். மருத்துவமனை வளாகத்தில் 5 மருத்துவ மாணவர்கள் உள்பட மேலும் பலர் உயிரிழந்தார்கள். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 -ஐ கடந்தது.
உயிரிழந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களுடைய உடலை உறவினர்களை ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அவசரகால ஆணையர் அலோக் பாண்டே கூறுகையில், "22 இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 22 குடும்பத்தினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் நிதிச் சுமையை எதிர்கொள்ளக் கூடாது காப்பீட்டு நடைமுறைக்கு உதவும் வகையில் 22 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டினர்களின் குடும்பத்தினர் திங்கள்கிழமை மாலை அல்லது செவ்வாய்க்கிழமை காலை இங்கு வந்தடைகிறார்கள்" என்றார்.
சிவில் மருத்துவமனை கூடுதல் மருத்துவக் கண்காணிப்பாளர் ராஜ்னிஷ் படேல் கூறுகையில், "மொத்தம் 47 பேருடைய உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவர்களில் 24 பேர் உடல்கள் அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்.
குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடலும் அடையாளம் காணப்பட்டுள்ளது. குஜராத் சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேல் கூறுகையில், "முதல்வர் பூபேந்திர படேல் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் இல்லத்துக்குச் சென்று அவருடைய உடல் டிஎன்ஏ பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தகவலை குடும்பத்தினரிடம் தெரிவித்தார். ராஜ்கோட்டில் இறுதி மரியாதை செலுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் அரசு உதவும் என முதல்வர் அவர்களிடத்தில் உறுதியளித்திருக்கிறார். உடலை எப்போது பெற்றுக்கொள்ளலாம் என்பதைக் குடும்ப உறுப்பினர்கள் முடிவு செய்வார்கள்" என்றார்.