
நடப்பாண்டின் இறுதியில் பிஹார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து வகையான அரசுப் பணிகளிலும், மாநிலத்தில் நிரந்தரமாக வசிக்கும் பெண்களுக்கு 35% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் இன்று (ஜூலை 8) அறிவித்துள்ளார்.
தன் எக்ஸ் கணக்கில் நிதீஷ் குமார் இன்று (ஜூலை 8) வெளியிட்ட பதிவில், `மாநில அரசில் உள்ள அனைத்து வகையான அரசுப் பதவிகளிலும் இருக்கும் அனைத்து பிரிவுகள் மற்றும் நிலைகளில் மேற்கொள்ளப்படும் நேரடி ஆள்சேர்ப்பில் பீஹாரில் வசிக்கும் பெண் தேர்வர்களுக்கு மட்டுமே 35% இடஒதுக்கீடு வழங்கப்படும்’ என்று அறிவித்தார்.
அதிகமான பெண்கள் வேலைவாய்ப்பு பெறுவதோடு, ஆட்சி மற்றும் நிர்வாகத்தில் பெரும் பங்கு வகிப்பதை உறுதி செய்வதே இந்த முடிவின் நோக்கம் என்று நிதிஷ் குமார் பதிவில் கூறியுள்ளார்.
பிஹார் தலைநகர் பட்னாவில் நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அத்துடன், இளைஞர்கள் மத்தியில் தனது அரசாங்கத்தின் மீதான பிம்பத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், பிஹார் இளைஞர் ஆணையம் புதிதாக உருவாக்கப்படுவதாகவும் நிதீஷ் குமார் அறிவித்தார். இந்த ஆணையம் பிரத்யேகமான சட்டத்தின் அடிப்படையில் அமையவுள்ளது.
இது தொடர்பாக தன் எக்ஸ் கணக்கில், நிதிஷ் குமார் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,
`பிஹார் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கவும், அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும், அவர்களை அதிகாரம் பெற்றவர்களாகவும், திறமைசாலிகளாக மாற்றவும், பிஹார் இளைஞர் ஆணையத்தை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கான ஒப்புதலை அமைச்சரவை இன்று வழங்கியுள்ளது’ என்றார்.