இந்திய எதிர்ப்பு சக்திகளுக்கு எதிராக..: சோனியா காந்தி குறித்து மத்திய அமைச்சர் கூறியது என்ன?

இதை காங்கிரஸ் கட்சி தொடர்பான பிரச்னையாக பார்க்க விரும்பவில்லை.
இந்திய எதிர்ப்பு சக்திகளுக்கு எதிராக..: சோனியா காந்தி குறித்து மத்திய அமைச்சர் கூறியது என்ன?
PRINT-87
1 min read

ஜார்ஜ் சோரோஸ் ஃபவுண்டேஷனுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்குத் தொடர்பு உள்ளதாக நேற்று (டிச. 8) பாஜக குற்றம்சாட்டியதை அடுத்து, இந்திய எதிர்ப்பு சக்திகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என இன்று கருத்துதெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு.

காஷ்மீர் பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் வகையில் செயல்படும் அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கும் ஜார்ஜ் சோரோஸ் ஃபவுண்டேஷனுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு தொடர்புள்ளதாக பாஜக நேற்று குற்றம்சாட்டியது.

இந்த விவகாரம் தொடர்பாக இன்று (டிச. 9) பேட்டியளித்த மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு, `நாட்டில் தற்போது ஜார்ஜ் சோரோல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்திய எதிர்ப்பு சக்திகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும், என காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடம் கூற விரும்புகிறேன்.

இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் உங்கள் கட்சித் தலைவர்களுக்குத் தொடர்பு இருந்தால், அதை நீங்கள் எதிர்த்துக் கேள்வி எழுப்பவேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் நான் கோரிக்கை விடுக்கிறேன். இதை காங்கிரஸ் கட்சி தொடர்பான பிரச்னையாக பார்க்க விரும்பவில்லை. இந்த விவகாரம் இந்திய எதிர்ப்பு சக்திகள் தொடர்பானது என்றால் இதை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்றார்.

அதானி விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுவருவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகள் இன்றும் (டிச.9) ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் ஜார்ஜ் சோரோஸ் ஃபவுண்டேஷனுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு உள்ள தொடர்பு குறித்து விவாதிக்கவேண்டும் என பாஜக கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in