வெளியாட்கள் நுழையத் தடை: உ.பி. மோதலை அடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
மசூதியை ஆய்வு செய்வது தொடர்பாக உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் நடைபெற்ற கலவரத்தை அடுத்து, உரிய அனுமதி இன்றி சம்பல் நகருக்குள் வெளியாட்கள் நுழைய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் சம்பல் மாவட்ட ஆட்சியர்.
உத்தர பிரதச மாநிலம் சம்பல் நகரின் மையப்பகுதியில் ஷாஹி ஜமா மசூதி அமைந்துள்ளது. முகலாயர் ஆட்சிக்காலத்தில் இந்த மசூதி கட்டப்படுவதற்கு முன்பு அங்கே ஹிந்துக் கோயில் இருந்ததாகவும், அங்கு ஆய்வு நடத்தி உண்மை தன்மையை கண்டறிய உத்தரவிடக்கோரியும் அம்மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், ஷாஹி ஜமா மசூதியில் ஆய்வு நடத்த தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அங்கு ஆய்வு நடத்த தொல்லியல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று (நவ.24) சென்றனர். அப்போது அங்கு கூடிய பொதுமக்கள் மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும், பொதுமக்கள் சிலருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் பாதிக்கப்பட்டு 4 பொதுமக்கள் உயிரிழந்தனர், மேலும் காவல்துறையினர் பலர் காயமடைந்தனர். கண்ணீர் புகை குண்டுகளை உபயோகித்து மோதலை கட்டுக்குள் கொண்டுவந்தனர் காவல்துறையினர். இதை தொடர்ந்து, மோதலை தூண்டியதாக சமாஜ்வாதி எம்.பி. ஸியா உர் ரஹ்மான் பர்க் உள்ளிட்ட 6 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை.
மேலும் மோதல் தொடர்பாக இதுவரை 25 நபர்களைக் கைது செய்துள்ளது காவல்துறை. இதைத் தொடர்ந்து, வரும் நவ.30 வரை உரிய அனுமதி இன்றி சம்பல் நகருக்குள் வெளியாட்கள் நுழைய தடை விதித்து சம்பல் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர பென்சியா இன்று (நவ.25) உத்தரவு பிறப்பித்துள்ளார்.