
போலியாக நீதிமன்றத்தில் 500-க்கும் மேற்பட்ட வழக்குகளை நடத்தி குஜராத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத்தைச் சேர்ந்த சாமுவேல் மோரிஸ் கிறிஸ்டியன் என்பவர் அம்மாநில தலைநகர் காந்திநகரில் கடந்த 2019-ல் ஒரு கட்டடத்தை வாடகைக்கு எடுத்து, போலி நீதிமன்றம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
உண்மையான நீதிமன்றத்தைப் போல் போலியாக எழுத்தர்கள், உதவியாளர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரை நியமித்து, நில விவகாரங்களுக்கான சிறப்பு தீர்ப்பாயத்துக்கான நீதிபதியாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார் கிறிஸ்டியன்.
பல்வேறு நீதிமன்றங்களில் நிலங்கள் சார்ந்த வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ள நபர்களை அணுகிய அவரது போலி வழக்கறிஞர்கள், சிறப்பு தீர்பாயத்தில் விரைவாகவும் சாதகமான முறையிலும் தீர்ப்பு பெற்றுத்தரப்படும் என்று உறுதியளித்துள்ளனர். இதனை தொடர்ந்து கிறிஸ்டியனின் தீர்ப்பாயத்தில் பலரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
மனுத்தாக்கல் செய்த நபர்களிடம் லஞ்சமாக பணத்தைப் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு சாதகமாக போலியான தீர்ப்புகளை வழங்கியுள்ளார் கிறிஸ்டியன். இவ்வாறு கடந்த ஓராண்டில் மட்டும் போலியாக சுமார் 500-க்கும் மேற்பட்ட வழக்குகளை நடத்தி பல கோடி ரூபாய் பணத்தை அவர் மோசடி செய்துள்ளார்.
இந்நிலையில், சுமார் 50 ஆண்டு காலமாக 200 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த பாபுஜி என்பவர் கிறிஸ்டியனுக்கு ரூ. 30 லட்சத்தை லஞ்சமாக வழங்கி, தனக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றுள்ளார். அதன்பிறகு சம்மந்தப்பட்ட அரசு நிலத்தை தன் பெயருக்கு பட்டா வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார் பாபுஜி.
ஆட்சியர் அலுவலகம் தன் மனு மீது பதிலளிக்காததால், கிறிஸ்டியனின் தீர்ப்பை இணைத்து அகமதாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் பாபுஜி. கிறிஸ்டியனின் தீர்ப்பு நகலை பார்த்து சந்தேகமடைந்த உரிமையியல் நீதிமன்ற பதிவாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவலர்கள் நடத்திய விசாரணையில் மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் போலி நீதிமன்றம் நடத்தி சட்டவிரோதமான முறையில் கோடிக்கணக்கான ரூபாய் அபகரித்தது தெரிய வந்தது. இதனை அடுத்து காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.