
நெஞ்சு வலியால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று அதிகாலை அனுமதிக்கப்பட்டுள்ள துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கரின் உடல்நிலை சீராக உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
73 வயதான ஜெக்தீப் தன்கர் இந்தியாவின் 14-வது துணை குடியரசுத் தலைவராக உள்ளார். இந்நிலையில், இன்று (மார்ச் 9) அதிகாலை 2 மணி அளவில் ஜெக்தீப் தன்கருக்கு நெஞ்சு வலியும், அசௌகரியமும் ஏற்பட்டுள்ளது. அதை அடுத்து உடனடியாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, எய்ம்ஸ் மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவரான மருத்துவர் ராஜீவ் நரங் தலைமையிலான மருத்துவர்கள் குழு, அவருக்கு சிகிச்சை அளித்தது.
இந்நிலையில், துணை குடியரசுத் தலைவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அதேநேரம், முன்னெச்சரிக்கை காரணமாக மருத்துவர்கள் குழுவின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, ஜெக்தீப் தன்கரின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்ள இன்று காலை எய்மஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்றார் மத்திய சுகாதார அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜெ.பி. நட்டா. துணை குடியரசுத் தலைவர் விரைவில் உடல்நலம் தேற வாழ்த்து தெரிவித்தார் நட்டா.