3 ஆண்டுகள் சிறை தண்டனை: கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த கர்நாடக அரசு புதிய சட்ட மசோதா!

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை, ரூ. 5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டையுமே விதிக்க சட்ட மசோதா வழிவகை செய்கிறது.
3 ஆண்டுகள் சிறை தண்டனை: கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த கர்நாடக அரசு புதிய சட்ட மசோதா!
ANI
1 min read

கடந்த ஜூன் 4-ம் தேதி நடைபெற்ற ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரத்தைத் தொடர்ந்து, `கர்நாடக கூட்ட நெரிசல் கட்டுப்பாட்டு மசோதா 2025’ என்ற பெயரிலான புதிய சட்ட மசோதாவை கர்நாடக அரசு முன்மொழிந்துள்ளது.

இன்று (ஜூன் 19) நடைபெற்ற அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த வரைவு மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பெரிய கூட்டங்களை ஒழுங்குபடுத்துவதையும், எதிர்காலத்தில் ஆர்சிபி நிகழ்வு போன்ற சம்பவங்களைத் தடுப்பதையும் இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக கூட்ட நெரிசல் கட்டுப்பாட்டு மசோதாவின் கீழ், காவல்துறை உத்தரவுகளை அல்லது சட்டத்தை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்க இந்த வரைவுச் சட்ட மசோதா முன்மொழிகிறது.

அரசியல் பேரணிகள், மாநாடுகள் போன்ற பொதுமக்கள் பங்கேற்கும் பொது நிகழ்வுகளில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், கட்டுப்படுத்தவும் இந்த வரைவு மசோதா பல்வேறு விதிமுறைகளை முன்மொழிகிறது.

அதேநேரம், பாரம்பரிய மற்றும் மதம் சார்ந்த திருவிழாக்கள், குறிப்பாக தேர் திருவிழாக்கள், பல்லக்கு ஊர்வலங்கள், படகு அல்லது தெப்ப திருவிழாக்கள், உர்ஸ் (சூஃபி திருவிழா) நிகழ்வு மற்றும் பிற மத ரீதியிலான கொண்டாட்டங்களுக்கு இந்த மசோதா விலக்கு அளிக்கிறது.

வணிக நிகழ்வுக்குத் திட்டமிடுபவர்கள் அதாவது, விளையாட்டு அல்லது சர்க்கஸ் நிகழ்ச்சிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்பவர்கள் - காவல்துறையிடம் அனுமதி பெறத் தவறினாலோ அல்லது கூட்டத்தை நிர்வகிக்க முடியாவிட்டாலோ, கூட்ட நெரிசலால் ஏற்படும் எந்தவொரு இழப்பிற்கும் ஈடு செய்யாமல் இருந்தாலோ, இந்த சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை, ரூ. 5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டையுமே விதிக்க இந்த சட்ட மசோதா வழிவகை செய்கிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in