
17 ஆண்டுகளுக்குப் பிறகு, பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். லாபம் ஈட்டியிருப்பதாக பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
நெட்வொர்க் விரிவாக்கம், செலவில் சிக்கனம், வாடிக்கையாளர்களை முன்வைத்து சேவையில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றம் போன்றவற்றால் 2007-ம் ஆண்டிற்குப் பிறகு, நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் மத்திய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். ரூ. 262 கோடி லாபம் ஈட்டியதாக செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தலைவரும் மேலாண் இயக்குநருமான ராபர்ட் ஜெ. ரவி நேற்று (பிப்.14) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது,
`ரீசார்ஜ் திட்டங்கள், ஃபைபர் வழி இணைய சேவை, குத்தகைத் தொகை ஆகியவற்றின் மூலம் நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டில் கிடைத்த லாபம், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட அதிகமாகும். ஒட்டுமொத்த செலவைக் குறைத்த காரணத்தால், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ரூ. 1,800 கோடிக்கும் அதிகமான இழப்பு தவிர்க்கப்பட்டிருக்கிறது.
சேவையில் புதுமை, வாடிக்கையாளர்கள் திருப்தி, நெட்வொர்க் விரிவாக்கம் ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்திய காரணத்தால் நடப்பு காலாண்டில் எங்களின் நிதி செயல்பாடு முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த முயற்சிகள் மூலம், நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி பெற்று நடப்பு நிதியாண்டின் இறுதியில் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.
பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் பி.எஸ்.என்.எஸ். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களின் 4ஜி நெட்வொர்க்கை விரிவாக்கம் செய்யும் விதமாக ரூ. 6000 கோடி நிதி தொகுப்பிற்கு ஒப்புதல் அளித்தது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை.