
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசி தாக்குதல் நடத்த முயற்சித்தவர், வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், தனது தலைமையிலான அமர்வு முன் பட்டியலிடப்படும் வழக்குகள் குறித்து வழக்கறிஞர்களிடம் இன்று (திங்கள்கிழை) காலை கேட்டறிந்து வந்தார். அப்போது வழக்கறிஞர் உடை அணிந்து வந்த ஒருவர் காலணியை எடுத்து தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வீச முயற்சித்தார்.
ஆனால், பாதுகாவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி அவரது முயற்சியை முறியடித்தார்கள். பாதுகாவலர்கள் அவரை அப்புறப்படுத்திச் சென்றபோது, சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது என்று அவர் முழக்கமிட்டதாக வழக்கறிஞர்கள் சிலர் கூறியதாகச் செய்திகள் வெளியாகின. அவர் பேப்பரை வீச முயன்றதாகவும் கூறப்பட்டன.
இச்சம்பவம் குறித்துப் பேசிய தலைமை நீதிபதி பிஆர் கவாய், "யாரும் கவனத்தைச் சிதறவிட வேண்டாம். நாங்கள் கவனத்தைச் சிதறவிடவில்லை. இச்செயல்கள் என்னைப் பாதிக்காது" என்றார். இதன் காரணமாக, நீதிமன்றச் செயல்பாடுகள் சிறிது நேரம் தடைபட்டன.
இதைத் தொடர்ந்து அவரிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. காவல் துறையினர் விசாரணையில் அவர் வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பது தெரியவந்தது. காஜுராஹோ கோயில் குறித்த தலைமை நீதிபதி கவாயின் கருத்து தன்னைக் கோபப்படுத்தியதாக அவர் காவல் துறையினரிடம் கூறியிருக்கிறார். இவர் பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களில் உறுப்பினராக இருந்துள்ளார்.
காவல் அதிகாரி ஒருவர் ஹிந்துஸ்தான் டைம்ஸிடம் கூறுகையில், "அவர் ஒரு பேப்பரையும் கொண்டு வந்திருந்தார். சனாதன தர்மம் அல்லது ஹிந்து மதத்தை இழிவுபடுத்துவதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது என்று அந்த பேப்பரில் எழுதப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்ற அலுவலகம் சார்பில் புகார் எதுவும் தெரிவிக்கப்படாததால் அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. வழக்கறிஞரை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அவருடைய காலணியும் ஆவணங்களும் கொடுக்கப்பட்டன" என்றார் அவர்.
இதன் காரணமாக பார் கவுன்சிலிலிருந்து வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இச்சம்பவத்துக்கு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தார்.
முன்னதாக ஒரு வழக்கு விசாரணையின்போது, தலைமை நீதிபதி பிஆர் கவாய் தெரிவித்த கருத்து பேசுபொருளானது. இதுவே இச்சம்பவத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் சதர்பூர் மாவட்டத்தில் ஜவாரி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சேதமடைந்துள்ள 7 அடி உயர விஷ்ணு சிலையை மாற்றி புதிய சிலையைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என ராகுல் தலால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு முன்பு இது விசாரணைக்கு வந்தது. அப்போது, இது விளம்பரம் தேடும் நோக்கில் தொடரப்பட்டுள்ள வழக்கு என்று கூறி, மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் கூறுகையில், "இது முழுக்க முழுக்க விளம்பரம் தேடும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு. ஏதாவது செய்யுமாறு கடவுளையே கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் தீவிர விஷ்ணு பக்தர் என்று கருதினால், பிரார்த்தனை செய்து தியானம் மேற்கொள்ளுங்கள்" என்றார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பிஆர் கவாய் தெரிவித்த இந்தக் கருத்து சமூக ஊடகங்களில் விவாதத்தைக் கிளப்பியது. பிறகு, இதுதொடர்பாக மௌனம் கலைத்த தலைமை நீதிபதி பிஆர் கவாய், "என் கருத்துகள் சமூக ஊடகங்களில் குறிப்பிட்ட ஒரு கோணத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்கள். நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன்" என்றார்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், "தலைமை நீதிபதி பிஆர் கவாயை எனக்குக் கடந்த 10 ஆண்டுகளாகத் தெரியும். எல்லா மதத் தலங்களுக்கும் அவர் சென்றுள்ளார்" என்றார்.
BR Gavai | Bar Council | CJI | Chief Justice of India | CJI BR Gavai | CJI Gavai |