ஹிண்டன்பர்கின் புதிய அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் வீழ்ச்சி

மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் காலை தொடங்கியதும், அதானி எனர்ஜி சொலியூசன்ஸ் பங்கு ஒன்றின் விலை 17.06 % குறைந்து ரூ. 915.70 ஆக சரிந்தது
ஹிண்டன்பர்கின் புதிய அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் வீழ்ச்சி
1 min read

அதானி குழுமம் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியின் தலைவர் மாதபி புச்சும் அவரது கணவர் தாவல் புச்சும் முதலீடு செய்துள்ளதாக கடந்த ஆகஸ்ட் 10-ல் அறிக்கை வெளியிட்டது அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம்.

கடந்த 2023 ஜனவரியில், அதானி குழுமத்தின் மீது பல்வேறு முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, முதல்முறையாக அறிக்கை வெளியிட்டது ஹிண்டன்பர்க் நிறுவனம். இந்த அறிக்கையைத் தொடர்ந்து அப்போது இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் கடுமையாக சரிந்து பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 10-ல் வெளியான ஹிண்டன்பர்கின் புதிய அறிக்கையை அடுத்து இன்று (ஆகஸ்ட் 12) பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியதும் 17 % வரை சரிவைச் சந்தித்துள்ளது அதானி குழும பங்குகள்.

மும்பை பங்குச் சந்தையில் அதானி பவர் பங்கு ஒன்றின் விலை 1.82 % குறைந்து ரூ. 682.75 ஆக உள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் பங்கு ஒன்றின் விலை 1.31 % குறைந்து ரூ. 3,145.90 ஆக உள்ளது. அதானி போர்ட்ஸ் பங்கு ஒன்றின் விலை 1.74 % குறைந்து ரூ. 1,507.10 ஆக உள்ளது. அதானி கிரீன் எனர்ஜி பங்கு ஒன்றின் விலை 1.17 % குறைந்து ரூ. 1,760.10 ஆக உள்ளது.

பங்குச்சந்தை வர்த்தகம் காலை தொடங்கியதும், அதானி எனர்ஜி சொலியூசன்ஸ் பங்கு ஒன்றின் விலை 17.06 % குறைந்து ரூ. 915.70 ஆக சரிந்தது. பிறகு 12.12 மணி அளவில் ரூ. 1,070.80 ஆக ஏற்றம் கண்டது. மேலும் அதானி டோட்டல் கேஸ் பங்கு ஒன்றின் விலை 13.39 % குறைந்து, ரூ. 753 ஆக சரிந்தது. பிறகு ரூ. 829.85 ஆக ஏற்றம் கண்டது.

ஹிண்டன்பர்க் அறிக்கை மும்பை பங்குச்சந்தையில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு நேரெதிராக இன்று நண்பகல் 12 மணி அளவில் சென்செக்ஸ் 207 புள்ளிகள் உயர்ந்து, 79,909 புள்ளிகள் ஆனது. நிஃப்டி 56.05 புள்ளிகள் உயர்ந்து 24,416 புள்ளிகள் ஆனது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in