
கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ரேணுகா சுவாமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கௌடா உள்பட 17 பேர் கடந்த ஜூன் மாதத்தில் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் தர்ஷன் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிறை வளாகத்திற்குள் காபி மற்றும் சிகரெட்டுடன் அமர்ந்திருக்கும் படமும், வீடியோ கால் பேசுவது போன்ற படமும் வெளியாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து பெங்களூரு சிறையில் நடிகர் தர்ஷனுக்கு சொகுசு வசதிகள் அளிக்கப்பட்டதாகக் கூறி 7 சிறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதன் பிறகு தர்ஷனை வேறு சிறைக்கு மாற்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக தனக்கு ஜாமின் வழங்கக் கோரி தர்ஷன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இதனை எதிர்த்து பெங்களூரு நீதிமன்றத்தில் தனக்கு கடுமையான முதுகுவலி இருப்பதால் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள இடைக்கால ஜாமின் வழங்கக் கோரியிருந்தார்.
இந்நிலையில் தர்ஷனுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் 6 வார கால இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.
ஒரு வாரத்துக்குள் சிகிச்சை குறித்த விவரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தர்ஷனுக்கு நிபந்தனைகள் அளிக்கப்பட்டுள்ளன.