
இந்தியாவில் 1,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சிங்கப்பூர் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் அதிகரித்து வந்த நிலையில், இந்தியாவிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (திங்கள்கிழமை) காலை 8 மணியளவில் தரவுகளைப் புதுப்பித்தது.
இதன்படி, இந்தியாவில் மொத்தம் 1,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்கள்.
மொத்தம் 1,010 பேர் சிகிச்சையில் உள்ளார்கள். இவர்களில் 753 பேருக்கு அண்மையில் (மே 19-க்கு பிறகு) தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
"அதிகபட்சமாக கேரளத்தில் 430 பேரும் மஹாராஷ்டிரத்தில் 210 பேரும், தில்லியில் 104 பேரும் கர்நாடகத்தில் 47 பேரும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்கள். அந்தமான் நிகோபார், அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், பிஹார், ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை" என்று மத்திய சுகாதாரத் துறை அறிக்கை கூறுகிறது.
தமிழ்நாட்டில் 69 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மே 19-க்கு பிறகு 60 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள்.