ஹரியானா பொதுத் தேர்தலை தனியாகச் சந்திக்கிறோம்: ஆம் ஆத்மி அறிவிப்பு

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகளில், 5-ல் பாஜகவும், 5-ல் காங்கிரஸும் வெற்றி பெற்றன
ஹரியானா பொதுத் தேர்தலை தனியாகச் சந்திக்கிறோம்: ஆம் ஆத்மி அறிவிப்பு
1 min read

இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கும் ஹரியானா மாநில பொதுத் தேர்தலைத் தனியாகச் சந்திக்கப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் இணைந்து போட்டியிட்டன.

சண்டிகரில் இன்று (ஜூலை 18) ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான், மாநிலங்களவை எம்.பி.க்கள் சஞ்சய் சிங், சந்தீப் பத்தக் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, `ஹரியானா மாநில பொதுத் தேர்தல்களை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். காங்கிரஸ், பாஜக, மேலும் பல கட்சிகளுக்கு ஹரியானா வாய்ப்பளித்தது, ஆனால் அவர்கள் அனைவரும் கொள்ளையில் ஈடுபட்டனர். ஹரியானா மக்கள் எங்களிடம் முறையீடு செய்தனர் அதனால்தான் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். நாங்கள் குழு அமைத்து தேர்தலில் போட்டியிட்டு, கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் இரட்டை எஞ்ஜின் ஆட்சியை வீழ்த்தப் போகிறோம்’ என்று பேட்டியளித்தார் பகவந்த் மான்.

ஹரியானா சட்டபேரவையில் 90 இடங்கள் உள்ளன. கடந்த 2019 பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதை அடுத்து துஷ்யந்த் சௌதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது பாஜக. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகளில், 5-ல் பாஜகவும், 5-ல் காங்கிரஸும் வெற்றி பெற்றன.

இந்த வருடத்தில் ஹரியானா, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கும், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கும் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றில் 2019-ல் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம், லடாக் யூனியன் பிரதேசம் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக அங்கே பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in