ஆம் ஆத்மி முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல்: 11 பேரில் மாற்றுக் கட்சியிலிருந்து வந்த 6 பேருக்கு வாய்ப்பு

இவர்களில் தலா 3 வேட்பாளர்கள் பாஜக மற்றும் காங்கிரஸிலிருந்து ஆம் ஆத்மிக்கு வந்தவர்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆம் ஆத்மி முதற்கட்டமாக வெளியிட்டுள்ள 11 வேட்பாளர்களில் 6 பேர் மாற்றுக் கட்சியிலிருந்து ஆம் ஆத்மிக்கு வந்தவர்கள்.

தில்லி சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது. பிரம்மா சிங் தன்வார் சதர்பூரில் போட்டியிடுகிறார். அனில் ஜா கிராடியில் போட்டியிடுகிறார். விஷ்வாஸ் நகரில் தீபக் சிங்லாவும் ரோஹ்தாஸ் நகரில் சரிதா சிங்கும் போட்டியிடுகிறார்கள்.

பிபி தியாகி, லக்‌ஷ்மி நகர் தொகுதியில் களமிறங்குகிறார். பதர்பூரில் ராம் சிங் நேதாஜி போட்டியிடுகிறார். சீமாபுரியில் வீர் சிங் திங்கன், சீலம்பூரில் ஸுபேர் சௌதரி போட்டியிடுகிறார்கள். கௌரவ் சர்மா கோண்டாவிலும் மனோஜ் தியாகி கராவல் நகரிலும் போட்டியிடுகிறார்கள். மடியாலாவில் ஷௌகீன் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடுகிறார்.

இவர்களில் தலா 3 வேட்பாளர்கள் பாஜக மற்றும் காங்கிரஸிலிருந்து ஆம் ஆத்மிக்கு வந்தவர்கள்.

பிரம்மா சிங் தன்வார் மற்றும் அனில் ஜா பாஜக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள். இவர்கள் இந்த ஆண்டு ஆம் ஆத்மியில் இணைந்தார்கள். பிபி தியாகி இரு முறை பாஜக கவுன்சிலராக இருந்துள்ளார்.

சோமேஷ் ஷௌகீன் காங்கிரஸ் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர். இவர் இந்த ஆண்டு ஆம் ஆத்மியில் இணைந்தார். வீர் சிங் திங்கன் முன்பு காங்கிரஸில் இருந்தவர். சீமாபுரியிலிருந்து மூன்று முறை சட்டப்பேரவைக்குத் தேர்வானவர். ஜுபேர் சௌதரி சீலம்பூரிலிருந்து சட்டப்பேரவைக்கு 5 முறை தேர்வான காங்கிரஸ் தலைவர் மடீன் அஹமதுவின் மகன்.

மாற்றுக் கட்சியிலிருந்து ஆம் ஆத்மிக்கு வந்த 6 பேருக்கு முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.

2020 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 62 இடங்களில் வெற்றி பெற்று மகத்தான முறையில் ஆட்சியைப் பிடித்தது. மீதமுள்ள 8 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸால் ஒரு வெற்றியைக்கூட பெற முடியவில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in