
வரும் 2025-ல் நடைபெறவுள்ள தில்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது ஆம் ஆத்மி கட்சி.
கடந்த மார்ச் 21-ல் தில்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார் அன்றைய தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். இதைத் தொடர்ந்து 6 மாத கால சிறைவாசத்திற்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் ஜாமின் வழங்கப்பட்டு கடந்த செப். 13-ல் சிறையில் இருந்து வெளியே வந்தார் கெஜ்ரிவால்.
அதன்பிறகு தில்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு தில்லி மக்கள் தனது நேர்மையை தீர்ப்பளிக்கும் வரை எந்தப் பதவியிலும் அமரப்போவதில்லை என செப்.15-ல் அறிவித்துவிட்டு, செப். 17-ல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்.
70 இடங்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 2025-ல் நிறைவடைகிறது. இதை முன்னிட்டு அடுத்த வருடம் ஜனவரி அல்லது பிப்ரவரியில் தில்லி சட்டப்பேரவைக்கு பொதுத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தில்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் 11 வேட்பாளர்களைக் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த நவ.21-ல் வெளியானது. இதில் பாஜகவில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்த அனில் ஜா, ப்ரம் சிங் தன்வார், பி.பி. தியாகி ஆகியோரும், காங்கிரஸில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்த சௌத்ரி ஸுபைர் அஹ்மத், வீர் திங்கன், சுமேஷ் ஷோகீன் ஆகியோர் இடம்பெற்றனர்.
இதைத் தொடர்ந்து, தில்லி சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடப்போவதாக கடந்த வாரம் அறிவித்தார் கெஜ்ரிவால். இந்நிலையில் தில்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் 20 வேட்பாளர்களைக் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று (டிச.9) வெளியானது. இந்தப் பட்டியலில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இடம்பெற்றுள்ளார்.