
அஸ்ஸாமில் மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தன்னிச்சையாக அறிவித்துள்ளது ஆம் ஆத்மி. இண்டியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளில் இழுபறி நீடிப்பதால் பொறுமை இழந்து முதலில் மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சந்தீப் பதக் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் இண்டியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி, தானாக 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைச் சமீபத்தில் அறிவித்த நிலையில் அஸ்ஸாமிலும் இதுபோன்று நடக்க ஆரம்பித்துள்ளது.
பஞ்சாப் மற்றும் தில்லியில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவதில் தயக்கம் காட்டி வருகிறது. ஆனால், அஸ்ஸாம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளில் 3 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி தன்னுடைய வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்துள்ளது.
குவஹாத்தியில் பாபென் சவுத்ரி, தில்பர்காவில் மனோஜ் தன்வார் மற்றும் சோனிபூரில் ரிஷி ராஜ் ஆகியோர் ஆம் ஆத்மி கட்சி சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இது குறித்துப் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய எம்.பி. சந்தீப் பதக், "இண்டியா கூட்டணியில் பல மாதங்களாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். சும்மா பேசிக்கொண்டே இருப்பதால் சோர்வடைந்து விட்டோம். இதுவரை ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. இன்னும் எவ்வளவுதான் பேசுவது? தேர்தலில் நாங்கள் ஜெயிக்கவேண்டும். நேரம் குறைவாக உள்ளது. நாங்கள் இண்டியா கூட்டணியில்தான் இருக்கிறோம். தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையைத் துரிதப்படுத்தவேண்டும். நாங்கள் அறிவித்த இந்த மூன்று தொகுதிகளையும் இண்டியா கூட்டணி எங்களுக்கே வழங்கும் என்று நம்புகிறோம்" என்றார்.
2019-ல் அஸ்ஸாமில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 14 தொகுதிகளில் 9-ல் பாஜக வென்றது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடப்போவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது. தில்லியைப் பொறுத்தவரை காங்கிரஸ் உடனான கூட்டணிக்கு ஆம் ஆத்மி தலைவர்கள் உடன்படவில்லை. எனினும், அமலாக்கத்துறை விசாரணை நடவடிக்கைகள் தொடர்வதால் கூட்டணி விஷயத்தில் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. பஞ்சாபிலும் தில்லியிலும் காங்கிரஸ் கட்சியோடு ஆம் ஆத்மி கூட்டணி சேராவிட்டால் பாஜகவின் வெற்றி எளிதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.