தில்லியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.வும், தில்லி வக்ஃபு வாரியத்தின் தலைவருமான அமானதுல்லா கானை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்தது மத்திய அமலாக்கத்துறை.
இன்று காலை (செப்.02) தில்லியில் உள்ள அமானதுல்லா கான் இல்லத்தில் சோதனையிட்டனர் அமலாக்கத்துறை அதிகாரிகள். அதைக் கண்டித்து தன் எக்ஸ் தளத்தில் காணொளி வெளியிட்டார் அமானதுல்லா கான். அதில், `கடந்த இரு வருடங்களாக நான் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகிறேன். என் மீது பொய்யான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. எங்கள் கட்சியை உடைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் பயப்படமாட்டோம்’ என்றார்.
தில்லி வக்ஃபு வாரியத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கும் அமானதுல்லா கான் தன் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி ரூ. 100 கோடி மதிப்பிலான வக்ஃபு வாரியத்தின் சொத்துக்களை குத்தகைக்கு விட்டதாகவும், சட்டவிதிகளை மீறி 32 ஒப்பந்தப் பணியாளர்கள் தில்லி வக்ஃபு வாரியத்தில் நியமிக்கப்பட்டதாகவும் அவர் மீது சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்குப் பதிந்துள்ளது அமலாக்கத்துறை.
மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்குப் பல முறை அழைத்தபோதும் அமானதுல்லா கான் அலுவலகத்தில் ஆஜராகவில்லை என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் அமானதுல்லா கான்.
மத்திய அரசு அமைப்பால் கைது செய்யப்படும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 4-வது முக்கிய நபராவார் அமானதுல்லா கான். இவருக்கு முன்பு, தில்லி துணை முதல்வர் பொறுப்பில் இருந்த மணீஷ் சிசோடியா, மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங், தில்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மணீஷ் சிசோடியாவும், சஞ்சய் சிங்க்கும் ஜாமினில் உள்ளனர்.
அமானதுல்லா கானின் கைதுக்குக் கண்டனத்தைத் தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் பரத்வாஜ், `மத்திய அமைப்புகள் எவ்வாறு தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை நாட்டு மக்கள் பார்த்து வருகின்றனர்’ என்றார்.