ஹரியானா சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வினேஷ் போகாட்டை எதிர்த்து மல்யுத்த வீராங்கனை கவிதா தலாலை களமிறக்கியுள்ளது ஆம் ஆத்மி கட்சி.
ஹரியானா சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலை இணைந்து சந்திக்க ஆம் ஆத்மியும், காங்கிரஸ் கட்சியும் முதலில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. ஆனால் தொகுதி உடன்பாட்டில் முடிவு எட்டப்படாததால் இரு கட்சிகளும் தனித்தனியாகத் தேர்தலைச் சந்திக்கின்றன.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாடுக்கு ஜூலானா சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தது காங்கிரஸ் கட்சி. இதைத் தொடர்ந்து கேப்டன் யோகேஷ் பைராகியை ஜூலானா சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக அறிவித்தது பாஜக.
இந்நிலையில் ஹரியானா சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் நான்காவது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. இதில் ஜூலானா சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக பிரபல WWE மல்யுத்த வீராங்கனை கவிதா தலாலை வேட்பாளராக அறிவித்துள்ளது ஆம் ஆத்மி.
இன்று (செப்.11) காங்கிரஸ் எம்.பி. தீபீந்தர் சிங் ஹூடா தலைமையில் சென்று வேட்புமனுத்தாக்கல் செய்தார் வினேஷ் போகாட். வேட்புமனுத்தாக்கல் முடிந்ததும் ஜூலானா மக்கள் தன் மீது காட்டிய அன்புக்கு நன்றி தெரிவித்த வினேஷ் போகாட், தன் வெற்றி உறுதியாகிவிட்டது என்று நம்பிக்கை தெரிவித்தார்.