பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்நாள் முழுக்க ஆதரவளிப்பதாக விஜய் கூறினார்: ஆதவ் அர்ஜுனா | Karur Stampede |
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்நாள் முழுக்க ஆதரவளிப்பதாகத் தன்னிடம் விஜய் கூறியதாக தவெக பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
கரூர் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்கவும், அதைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவையும் அமைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து உச்ச நீதிமன்ற வளாகத்தில் தவெக பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறியதாவது:-
கரூரில் நடந்தது முதல் கூட்டம் அல்ல. திருச்சி, அரியலூர், நாமக்கல், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற பல ஊர்களுக்குச் செல்லும்போது, கிட்டத்தட்ட கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத ஒரு எழுச்சியை ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் மிகப்பெரிய நம்பிக்கையுடனும், அன்புடனும் உருவாக்கினார்கள்.
அரியலூரில் காவல்துறை ஆதரவளித்தது. பெரம்பலூர் எஸ்.பி. எங்களுக்கு முன்னெச்சரிக்கையாகப் பல தகவல்களை வழங்கினார். அதனால் தான் கடைசி நிமிடத்தில் அந்த நிகழ்ச்சியை நாங்கள் ரத்து செய்தோம். ஆனால், எப்போதும் இல்லாத அளவுக்கு கரூரில், நாமக்கல்லில் நிகழ்ச்சியை மக்களின் ஆதரவுடன் நல்ல முறையில் முடித்தோம். காவல்துறை சொன்ன நேரமான காலை மூன்று முதல் பத்து வரை, விஜயின் நாமக்கல் வருகையும் பிரசாரமும் நடந்தது. எங்களுடைய சொந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் எல்லா ஊடகங்களுக்கும் இணைப்பு கொடுத்திருந்தோம். எனவே, விஜய் எங்கிருக்கிறார் என்பது தெரியும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், விஜய் தாமதமாக வந்தார் என்று ஒரு அபாண்டமான குற்றச்சாட்டு பரப்பப்பட்டது. காவல்துறை சொன்ன நேரத்தில், சரியான இடத்தில் தான் நாங்கள் சென்றோம்.
கரூர் மாவட்ட எல்லையில் கரூர் காவல்துறைதான் எங்களை வரவேற்றது. இது வேறு எந்த மாவட்டத்திலும் நடக்கவில்லை. ஒட்டுமொத்த காவல்துறையும் வந்து, கயிறு போட்டு, பந்தல் விரித்து, எந்த இடத்தில் நிறுத்தினார்களோ, அந்த இடத்தில் நிறுத்தினார்கள். விஜயும் எல்லாம் சௌகரியமாக இருக்கிறதா என்று கேட்டு, மேடையில் பேச ஆரம்பித்தார்.
பேச ஆரம்பிக்கும் போது, விஜய் எப்போதும் மக்களைப் பார்த்துப் பேசினார். எங்கு தண்ணீர் கேட்டார்களோ, அங்கு அவரே கொடுத்தார். எங்கு ஆம்புலன்ஸ் வழிவிட வேண்டும் என்று சொன்னாரோ, அவரே சொன்னார். எனவே, அவரைப் பொறுத்தவரை, எங்களைப் பொறுத்தவரை, எந்த பிரச்னையும் இல்லை என்று சொல்லிவிட்டு, விஜய் பேச்சை சுருக்கமாக முடித்துவிட்டுக் கிளம்பினார்.
இந்த பிரச்னை நடந்த பிறகு, எல்லோரும் சொல்வது போல், “இவர்கள் எல்லாம் ஓடிவிட்டார்கள்” என்று கூறுவது உண்மையல்ல. எங்களுடைய செல்போன் இணைப்புகளைச் சரிபார்க்கலாம். கரூர் எல்லையில் நானும், பொதுச்செயலாளர் நிர்மகுமார், அருண்ராஜ் ஆகியோரும் காத்திருந்தோம். காவல்துறை உள்ளே வர வேண்டாம், வந்தால் கலவரம் ஏற்படும், நிறைய பிரச்னைகள் நடக்கும் என்று வலியுறுத்தினார்கள். அதையும் நாங்கள் தாக்கல் செய்வோம்.
நாங்களும் மனிதர்களே. எல்லோரும் சொல்வது போல் 75 ஆண்டுகளாகவோ, 60 ஆண்டுகளாகவோ இருக்கும் அரசியல்வாதிகள் அல்லர். நாங்கள் முதலில் மனிதர்கள், பின்னர் தலைவர்கள், அதற்குப் பின்னரே அரசியல். இறப்பு ஏற்பட்ட உடனே முதல் மூன்று அல்லது நான்கு நாட்கள் என்ன செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை. எங்களுடைய உறவுகள் இறந்துவிட்டால் ஊடகங்களுக்கு முன்னால் வந்து பேசிக் கொண்டிருக்க மாட்டோம்.
சம்பவம் நடந்த 5-வது நாள் விஜய் எங்களிடம், “ பாதிக்கப்பட்ட குடும்பங்களை நான் தனிப்பட்ட முறையில் தத்தெடுக்கப் போகிறேன். நான் வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் பயணிக்கப் போகிறேன். இந்த உறவுகள், பணம் கொடுத்து முடித்துவிடுவது இல்லை. அவர்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கு எல்லாம் உடன் இருக்க வேண்டும். முதல் நாள் மலர் வளையம் வைத்துவிட்டு போவது தவெக இல்லை. வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு தேவையான பயணத்தை உருவாக்குகிறோம்,” என்று கூறினார். இந்த இறப்புகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றார்.