
சத்தீஸ்கர் வரலாற்றில் முதல்முறையாக தாம் கைப்பட எழுதிய 100 பக்க பட்ஜெட்டை நேற்று (மார்ச் 4) தாக்கல் செய்தார் மாநில நிதியமைச்சர் ஓ.பி. சௌதரி.
கணினிகள் மற்றும் மின்னணு ஆவணப்படுத்துதல் முறை பயன்பாட்டிற்கு வந்த காலகட்டம் வரையில் கைப்பட எழுதி மத்திய, மாநில பட்ஜெட்டுகளை தயாரிக்கும் முறை புழக்கத்தில் இருந்தது.
இந்தியாவின் முதல் நிதியமைச்சரான ஆர்.கே. சண்முகம் செட்டி நாட்டின் முதல் பட்ஜெட்டை கைப்பட எழுதிய முறையில் தாக்கல் செய்தார். இதுவரை மத்திய பட்ஜெட்டுகளை அதிக முறை தாக்கல் செய்துள்ள முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்கூட கைப்பட எழுதிய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார்.
ஆனால் காலப்போக்கில் தொழில்நுட்பம் முன்னேறி, அச்சடிக்கப்பட்ட பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டன. தற்போது ஹிமாச்சல பிரதேசம் போன்ற ஓரிரு மாநிலங்களில் முற்றிலுமாக மின்னணு முறையில் பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், சத்தீஸ்கர் வரலாற்றில் முதல்முறையாக, தாம் கைப்பட எழுதிய 100 பக்க பட்ஜெட்டை நேற்று (மார்ச் 4) சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் அம்மாநில நிதி அமைச்சர் ஓ.பி. சௌத்ரி. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் சௌத்ரி, நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை இந்த முறை ஊக்குவிப்பதாக கூறியுள்ளார்.