

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 17 குழந்தைகளைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்து மிரட்டிய நபர் காவல்துறையினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மும்பையை அடுத்த பவாய் பகுதியில் உள்ள ஆர்.ஏ. ஸ்டூடியோவில் யூடியூப் சேனலுக்குக் குழந்தைக் கலைஞர்களைத் தேர்ந்தெடுக்கும் பணி நடந்தது. அதற்காக 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளே இருந்தனர். அப்போது திடீரென்று அங்கு பணியாற்றிய ரோஹித் ஆர்யா என்பவர் குழந்தைகளைச் சிறை வைத்தார். இதையடுத்து குழந்தைகளின் பெற்றோரும் உறவினர்களும் ஸ்டூடியோவுக்கு வெளியில் கூடினர். மேலும், குழந்தைகள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து விரைந்து வந்த மும்பை காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர், ஸ்டூடியோவுக்குள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது காவலர்களைப் பார்த்து ரோஹித் ஆர்யா சுட்டதனால், பதிலுக்குக் காவலர்களும் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதில், அவர் காயமடைந்த நிலையில், விரைந்து 17 குழந்தைகளையும் மீட்டனர். மேலும், ரோஹித் ஆர்யாவிடம் இருந்து ஏர்கன் மற்றும் சில ரசாயனங்களைப் பறிமுதல் செய்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முன்னதாக குழந்தைகளைப் பிடித்து வைத்திருந்தபோது ரோஹித் ஆர்யா பதிவு செய்த மிரட்டல் காணொளி வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-
”நான் ரோஹித் ஆர்யா. தற்கொலை செய்து கொள்வதற்குப் பதிலாக ஒரு திட்டம் தீட்டி, சில குழந்தைகளை இங்கே பிணைக் கைதிகளாக வைத்துள்ளேன். எனக்கு வேண்டியதெல்லாம் என் கோரிக்கைகளைக் கேட்க வேண்டும். எனக்குப் பணம் தேவையில்லை. நான் சிலரிடம் பேச வேண்டும். சில கேள்விகளைக் கேட்க வேண்டும். நான் பயங்கரவாதி அல்ல. எந்தவொரு சிறிய தவறான நடவடிக்கையும் என்னைக் கோபப்படுத்திவிடும். பிறகு நான் இந்த இடத்தில் நெருப்பைப் பற்ற வைத்துவிடுவேன். சில பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டும். நான் உயிரோடு இருந்தால் இதைச் செய்வேன். அல்லது வேறு யாராவது இதைச் செய்வார்கள்” என்று கூறியுள்ளார்.
இதனால் பவாய் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பதற்றம் நிலவிய நிலையில், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரித்ததில் ரோஹித் ஆர்யா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது.
A man who held 17 children hostage and threatened them in Mumbai, Maharashtra, was shot dead in a police encounter.