93 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன: பினராயி விஜயன்

"கேரளம் முழுக்க 118 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 5,531 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்."
93 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன: பினராயி விஜயன்
ANI
2 min read

வயநாடு நிலச்சரிவிலிருந்து இதுவரை 93 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த பினராயி விஜயன் கூறியதாவது:

"வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு என்பது மனதை நொறுக்கக் கூடிய பேரழிவு. மிகக் கடுமையான மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்த பகுதியும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதுவரை 93 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மாறலாம். மொத்தம் 128 பேர் காயத்துக்கு சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

முடிந்தளவுக்கு அனைவருக்கும் சிறப்பான சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளார்கள். வயநாட்டில் மொத்தம் 45 மீட்பு முகாம்களைத் திறந்துள்ளோம். கேரளம் முழுக்க 118 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 5,531 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். தீயணைப்புத் துறை, தேசிய பேரிடர் மீட்புத் துறை மற்றும் காவல் துறை ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறது. ராணுவம் மற்றும் கடற்படையின் பல்வேறு பிரிவுகள் மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றன.

தீயணைப்புத் துறையில் 321 பேர் குவிக்கப்பட்டுள்ளார்கள். ராணுவத்தினரின் சேவையும் பயன்படுத்தப்படுகிறகு. தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 60 பேர் வயநாட்டை வந்தடைந்திருக்கிறார்கள். பெங்களூருவிலிருந்து 80 பேர் கொண்ட குழு வந்துகொண்டிருக்கிறது. பிரதமர், ராகுல் காந்தி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் உதவிகளை வழங்கியுள்ளார்கள். இந்தச் சிக்கலான சூழலில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என உறுதியளித்துள்ளார்கள்.

"வயநாட்டில் உள்ள முகாம்களில் மட்டும் 3,069 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். 5 அமைச்சர்கள் மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்கள். மோசமான வானிலை காரணமாக, மக்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். மீட்புப் பணிகளுக்கு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

முகாம்களில் குடிநீர், உணவு மற்றும் இதர அத்திவாசியப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய உள்ளாட்சி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரிடர் இடங்களில் வேடிக்கைப் பார்க்க வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும். அரசின் பல்வேறு துறைகளால் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடுமையான மழை காரணமாக, அத்திவாசிய சேவைகளில் ஈடுபடக் கூடிய அதிகாரிகளைத் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 20 ஆயிரம் லிட்டர் தண்ணீருடன் இரு வாகனங்கள் பேரிடர் இடத்தை வந்தடையவுள்ளன. விடுப்பிலுள்ள சுகாதாரத் துறைப் பணியாளர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்தப் பகுதியை மறுகட்டமைப்பு செய்ய நிறைய உதவிகள் தேவைப்படுகின்றன. முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். தேவையற்ற வாகனங்களின் வருகையால் அவசியமற்ற நெரிசல்கள் ஏற்படுகின்றன. எனவே, அவசியமில்லாமல் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு கேரள வங்கி ஏற்கெனவே ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது. சிக்கிம் முதல்வர் ரூ. 2 கோடி அளிப்பதாக உறுதியளித்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ. 5 கோடி வழங்குவதாக வாக்குறுதியளித்திருக்கிறார்" என்றார் பினராயி விஜயன்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in