நாடு முழுவதிலும் உள்ள கழிவு நீர் தொட்டிகள் மற்றும் சாக்கடைகளை சுத்தீகரிக்கும் துப்புரவுப் பணியாளர்களில் 91.9 சதவீதத்தினர் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் என்பது மத்திய அரசு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கழிவு நீர் தொட்டிகள் மற்றும் சாக்கடைகளை சுத்தீகரிக்கும் பணியில் ஈடுபட்டுவரும் துப்புரவுப் பணியாளர்கள் தொடர்பான ஆய்வை நாட்டின் 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 3,000 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சமீபத்தில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகம் நடத்தியது. இந்த ஆய்வு சுமார் 38,000 துப்புரவுப் பணியாளர்களிடம் நடத்தப்பட்டது.
ஆய்வு நடத்தப்பட்ட 38,000 துப்புரவுப் பணியாளர்களில், 68.9 சதவீதத்தினர் பட்டியல் சமூகத்தினர்கள், 14.7 சதவீதத்தினர் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், 8.3 சதவீதத்தினர் பழங்குடியினர் மற்றும் 8 சதவீதத்தினர் பொதுப் பிரிவினர் என்பது தெரியவந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு ஆய்வறிக்கையின்படி, 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் சுமார் 377 துப்புரவுப் பணியாளர்கள், கழிவு நீர் தொட்டிகள் மற்றும் சாக்கடைகளை சுத்தீகரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும்போது உயிரிழந்துள்ளனர்.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி அமைச்சகத்தின்படி 5 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு உள்ளாட்சி அமைப்பில் சுமார் 100 துப்புரவுப் பணியாளர்கள் பணியாற்றி வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் உள்ள 4,800 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சுமார் 1 லட்சம் துப்புரவுப் பணியாளர்கள் வரை பணியாற்றிக் கொண்டிருப்பதாக அரசு மதிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள துப்புரவுப் பணியாளர்களைக் கணக்கெடுத்து அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களைக் கொடுத்து உதவ `நமஸ்தே திட்டத்தை’ செயல்படுத்தி வருகிறது மத்திய சமூக நீதி அமைச்சகம்.