90 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் வளர்ச்சியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்: ராகுல் காந்தி

சமூக நீதியை நோக்கி அரசியல் சாசனம் நம்மை வழி நடத்தியதுபோல, ஒரு விரிவான சமூக-பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு இன்று நமக்கான வழிகாட்டியாக இருக்கும்
90 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் வளர்ச்சியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்: ராகுல் காந்தி
ANI
1 min read

இந்தியாவில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர், அவர்களை வளர்ச்சிக்குள் கொண்டுவர சாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம் என்று தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. அவரது பதிவு பின்வருமாறு:

`சமூக நீதியை வழங்கும் கொள்கைக் கட்டமைப்பை உருவாக்கவே சாதிவாரிக் கணக்கெடுப்பு தேவைப்படுகிறது.

இந்திய அரசியல் சாசனம் ஓவ்வொரு இந்தியருக்கும் நீதி மற்றும் சமத்துவத்தை வழங்குகிறது. ஆனால் இன்றைய அளவில் உண்மை என்னவென்றால், நமது மக்கள் தொகையில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

90 சதவீத பகுஜன்கள், அதாவது தலித்துகள், ஆதிவாசிகள், ஓபிசிக்கள், சிறுபான்மையினர், பொதுப் பிரிவு ஏழைகள் ஆகியோர் திறமையான, கடின உழைப்பாளிகள். வாய்ப்புகளில் இருந்து அவர்களை விலக்குவது, 10 சிலிண்டர் எஞ்சினில் 9 சிலிண்டர்களை மூடுவதைப் போன்றது. இதனால் ஒரு தேசமாக நாம் வெகுதூரம் செல்ல முடியாது.

சமூக நீதியை நோக்கி அரசியல் சாசனம் நம்மை வழி நடத்தியதுபோல, ஒரு விரிவான சமூக-பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு இன்று நமக்கான வழிகாட்டியாக இருக்கும். நாட்டின் முன்னேற்றத்தில் 90 சதவீத மக்களை சேர்த்துக்கொள்ளவும், அரசியல் சாசனத்தின் வாக்குறுதியை நிறைவேற்றவும் இது உதவும்.

இந்தக் கணக்கெடுப்பு, மக்கள் தொகையைக் கணக்கீடு செய்வதைவிட அதிகமான பணிகளை மேற்கொள்ளும். அரசு, தொழில், ஊடகம், நீதித்துறை என நம் தேசத்தின் நிறுவனங்களில் யாரெல்லாம் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர், யாருக்கெல்லாம் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பதை நமக்குக் காண்பிக்கும்.

நீண்ட கால பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கான கொள்கைகளை வடிவமைப்பதில் இந்தக் கணக்கெடுப்பின் தரவுகள் மிகவும் அவசியம். உதாரணமாக, இடஒதுக்கீடு மீதான தன்னிச்சையான 50 சதவீத வரம்பு திருத்தப்படும். இதனால் அனைத்து சமூகங்களுக்கும் நியாயமான வகையில் கல்வி மற்றும் அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் கிடைக்கும்.

இந்திய மக்கள் தங்கள் குரல்களை ஏற்கனவே கேட்க வைத்துள்ளனர் என்பதை பிரதமர் மோடி அங்கீகரிக்க வேண்டும். ஒரு விரிவான சமூக-பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது நடக்கும். ஒன்று அதை அவர் இப்போது செயல்படுத்த வேண்டும் அல்லது அடுத்த பிரதமர் அவ்வாறு செய்வதை அவர் பொருத்திருந்து பார்க்க வேண்டும்’.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in