பிரதமர் பதவிக்கு சரியான தேர்வு மோடியா, ராகுலா?: ஆய்வில் தகவல்!

நாட்டின் மனநிலை என்ற தலைப்பில் ஏசியாநெட் செய்திகள் நாடு முழுக்க கருத்துக் கேட்பு நடத்தியுள்ளது.
பிரதமர் பதவிக்கு சரியான தேர்வு மோடியா, ராகுலா?: ஆய்வில் தகவல்!

பிரதமர் பதவிக்கு சரியான தேர்வாக நரேந்திர மோடி இருப்பார் என 51.06 சதவீதத்தினரும், ராகுல் காந்தி என 46.45 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்துள்ளதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

நாட்டின் மனநிலை என்ற தலைப்பில் ஏசியாநெட் செய்திகள் நாடு முழுக்க கருத்துக் கேட்பு நடத்தியுள்ளது. இந்தக் கருத்துக் கேட்பின்படி பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி முன்னணி தேர்வாக உள்ளார்.

இந்தக் கருத்துக் கேட்பு தகவல்கள் புதன்கிழமை வெளியாகின. இதன் அடிப்படையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியது தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என 51.1 சதவீதத்தினர் கருத்து தெரிவித்துள்ளார்கள். 22.02 சதவீதத்தினர் எந்த நேர்மறையான தாக்கத்தையும் பாஜகவுக்குக் கொடுக்காது என்று தெரிவித்துள்ளார்கள்.

தமிழ்நாட்டில் 48.4 சதவீதத்தினர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியது தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக எந்தத் தாக்கத்தையும் உண்டாக்காது என்று கருத்து தெரிவித்துள்ளார்கள். 57.16 சதவீதத்தினர் ராமர் கோயிலைக் கட்டியது மக்களவைத் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கணித்துள்ளார்கள்.

பிரதமர் பதவிக்கான சரியான தேர்வாக நரேந்திர மோடி இருப்பார் என 51.06 சதவீதம் பேர் தெரிவித்துள்ளார்கள். இவருக்கு அடுத்தபடியாக ராகுல் காந்தி சரியான தேர்வாக இருப்பார் என 46.45 சதவீதத்தினர் தெரிவித்துள்ளார்கள். ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரளத்திலிருந்து மட்டும் பெரிய எண்ணிக்கையில் கருத்து தெரிவித்துள்ளார்கள். கேரளத்திலிருந்து 50.59 சதவீதம் பேர் பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி சரியான தேர்வாக இருப்பார் எனத் தெரிவித்துள்ளார்கள்.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ளவர்கள்கூட இண்டியா கூட்டணியால் மோடி அலையை வெல்ல முடியும் என்று கூற முடியவில்லை. 60.33 சதவீதத்தினர் மோடி அலையை இண்டியா கூட்டணியால் வெல்ல முடியாது என்று கருத்து கூறியுள்ளார்கள். 32.28 சதவீதத்தினர் மட்டுமே இண்டியா கூட்டணியால் மோடி அலையை வெல்ல முடியும் என்று கூறியுள்ளார்கள்.

ஹிந்தி பேசும் மாநிலங்களில் 36.7 சதவீதத்தினர் வேலைவாய்ப்பின்மையே மோடி அரசின் தோல்வி எனத் தெரிவித்துள்ளார்கள். தமிழ்நாட்டில் 41.79 சதவீதத்தினர் விலை உயர்வைக் காரணமாகக் கூறியுள்ளார்கள்.

மோடி அரசின் சிறந்த சாதனையாக உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகள் என 38.11 சதவீதத்தினர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in