75 வயதில் உலகப் புகழ்: யார் இந்த நரேந்திர மோடி? | Narendra Modi | PM Modi |

ஆர்எஸ்எஸ் பிரசாரக் - குஜராத் முதல்வர் - இந்தியப் பிரதமர்
75 வயதில் உலகப் புகழ்: யார் இந்த நரேந்திர மோடி? | Narendra Modi | PM Modi |
ANI
5 min read

அரசியல் பின்னணி இல்லாத குடும்பம். குஜராத்தில் சிறு நகரத்தில் டீ விற்ற தொழிலாளியின் 6 பிள்ளைகளில் மூன்றாவது மகன். நடுத்தர வர்க்கம்.

இப்படித் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த மோடி எப்படி உலகப் புகழ்பெற்ற தலைவராக முன்னேறினார்? தொடர்ச்சியாக 3-வது முறையாகப் பிரதமர் பதவியை வகிக்கும் அளவுக்கு மக்களைத் தன் பக்கம் இழுத்தது எப்படி?

இன்று தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடும் மோடி என்ன மாயாஜாலம் செய்து இப்படியொரு மோடி ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தார்?

குஜராத் மாநிலம் வத் நகர் என்கிற சிறிய கிராமத்தில் 1950-ல் பிறந்தார் நரேந்திர மோடி. பி.என். உயர்நிலைப் பள்ளியில் படித்தார். சிறு வயதில் புத்தகங்கள் வாசிப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார் மோடி. மேலும் நாடகங்களில் நடிப்பதிலும் ஈடுபாடு காண்பித்தார். சுவாமி விவேகானந்தரைப் பற்றி படித்த பிறகு இமயமலைக்குச் செல்லவேண்டும் என்கிற ஆர்வம் அச்சிறு வயதில் மோடிக்கு ஏற்பட்டது. வீட்டை விட்டுக் கிளம்பிய மோடி, அடுத்த இரு வருடங்கள் வீட்டுக்கே திரும்பவில்லை. ஒருவழியாகத் தனது ஆன்மிகத் தேடலை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினார். அப்போதும் அவர் குடும்பத்துடன் இணைந்து வாழ விரும்பவில்லை.

1967-ல் ஊரை விட்டுக் கிளம்பி அஹமதாபாதுக்குச் சென்றார் மோடி. பிறகு 32 வருடங்களுக்குப் பிறகு 1999-ல் தான், தனது பள்ளியின் பொன்விழாவில் கலந்துகொள்வதற்காக மீண்டும் சொந்த ஊருக்கு வந்தார்.

மோடியின் மனைவி குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வந்தாலும் 2014 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும்போது வேட்புமனுவில் யசோதா பென் என்கிறவரைத் தன்னுடைய மனைவியாகக் குறிப்பிட்டிருந்தார் மோடி. எனினும் இவரைப் பற்றி இதுவரை மோடி வெளிப்படையாகப் பேசியதில்லை.

பதின்ம வயதில் அஹமதாபாத்துக்கு வந்த மோடி, ஆரம்பத்தில் பாரதிய ஜனசங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். பிறகு அதன் சகோதர அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்துகொண்டார். தேர்தல் அரசியலில் ஈடுபடாமல் நம் கலாசாரத்தைப் பாதுகாப்பதில் ஈடுபாடு காட்டியதும் கட்டுப்பாடுடன் இயங்கியதும் மோடியை ஈர்த்தன. ஆர்எஸ்எஸ் அமைப்புக்குள் அடுத்தடுத்து வளரத் தொடங்கினார். 1972-ல் ஆர்எஸ்எஸ் பிரசாரக் ஆனார் மோடி. கூட்டங்கள் நடத்துவது, ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கங்களை மக்களிடத்தில் விளக்கும் உள்ளிட்ட பொறுப்பு அவரிடம் வழங்கப்பட்டது.

ஆர்எஸ்எஸ் பின்னணியைக் கொண்ட பாஜக தலைவர்கள் வரலாற்றில் முக்கிய அத்தியாயமாக இருப்பது 1975-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பிறப்பித்த அவசர நிலை. நாடு முழுக்க எதிர்க்கட்சியினர் கடும் நெருக்கடியைச் சந்தித்தார்கள். ஜனநாயகத்தின் இந்த இருண்ட காலம் ஜன சங்கத் தலைவர்களின் அரசியல் வாழ்க்கையில் ஒளியைப் பாய்ச்சியது. இதை ஒரு வாய்ப்பாகக் கருதிய மோடி, நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கினார். ஆர்எஸ்எஸ் மற்றும் ஜன சங்கத்தின் முன்னணி தலைவர்களின் அறிமுகத்தைப் பெற்றார். தனது துடிப்பான செயல்பாடுகள் அவர்களது நன்மதிப்பையும் சம்பாதித்தார். இவர்களில் முக்கியமானவர், பாஜகவை நிறுவியவர்களுள் ஒருவரான எல்.கே. அத்வானி.

நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை எழுதும்போது அத்வானியின் பெயரைத் தவிர்க்கவே முடியாது. ஆர்எஸ்எஸ்-க்காக அமைப்பு ரீதியாக உழைத்தவர்கள் கட்சிப் பணியை ஆற்றுவதற்காக பாஜகவுக்கு அனுப்பி வைக்கப்படுவது மரபு. மோடியை ஆர்எஸ்எஸ்-ல் இருந்து பாஜகவுக்கு அழைத்துச் சென்றவர் அத்வானி.

1987-ல் அஹமதாபாத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் பிரசாரத்தைத் திட்டமிட்டு வழிநடத்தியவர் மோடி. விளைவு, உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி கண்டது.

இதற்குப் பரிசளிக்கும் விதமாக, குஜராத் பாஜகவில் மோடியை அமைப்புச் செயலாளர், பொதுச்செயலாளர் பதவிகளில் அமரவைத்து அழகு பார்த்தார் அத்வானி. 1990-க்குப் பிறகு ரத யாத்திரை மேற்கொண்டபோது அத்வானியுடன் பயணித்தது, மோடிக்குப் பெரும் பாய்ச்சலாக அமைந்தது. 1990-களுக்குப் பிறகு தேசிய அரசியலிலும் ஒரு வலம் வந்த மோடி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவின் மேலிடப் பொறுப்பாளராகச் செயல்பட்டார்.

1995-க்குப் பிறகு குஜராத் அரசியலுக்கு மீண்டும் திரும்பினார் மோடி. குஜராத்தில் 1995-ல் பாஜக ஆட்சி அமைத்தது தான் மோடியின் வாழ்க்கையில் தேர்தல் அரசியலுக்கான முதல் அடித்தளம். கேஷுபாய் படேல் தலைமையிலான பாஜக ஆட்சி உள்ளாட்சித் தேர்தல் தோல்விகள், உள்கட்சி கோஷ்டிப் பூசல்கள் உள்ளிட்ட காரணங்களால் இறங்கு முகத்தில் இருந்தது. குறிப்பாக, 2001-ல் குஜராத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக தோல்வி கண்டது. பாஜக இழந்தது சபர்மதி சட்டப்பேரவைத் தொகுதி மற்றும் சபர்கந்தா மக்களவைத் தொகுதி.

சபர்மதி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக தோல்வியடைந்தது தலைமையைக் கொதிப்படையச் செய்தது. காரணம், அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியின் நாடாளுமன்றத் தொகுதியின் காந்தி நகர் மக்களவைத் தொகுதிக்குள் தான் சபர்மதி சட்டப்பேரவைத் தொகுதியும் இருந்தது.

நிலைமையை உணர்ந்து சுதாரித்துக் கொண்ட பாஜக தலைமை, குஜராத் முதல்வராக இருந்த கேஷுபாய் படேலை தில்லிக்கு அழைத்து பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டது. கேஷுபாய் படேலுக்குப் பதில் முதல்வராக யாரை நியமிப்பது என்ற கேள்வி எழுந்தபோது, நரேந்திர மோடியை முன்னிறுத்தினார் அத்வானி.

மூழ்கும் கப்பலை மீட்டெடுக்கும் பணி பாஜகவின் அப்போதைய தேசியச் செயலராக இருந்த மோடியிடம் வழங்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் பிரசாரக் ஒருவர் முதல்வர் பதவியை ஏற்றது அதுவே முதன்முறை. இத்தனைக்கும் மோடி அதுவரை ஒரு தேர்தலைக்கூட சந்தித்தது கிடையாது. நேராக குஜராத் முதல்வர் பதவி அவர் மடியில் வந்து விழுந்தது. முதல்வரான பிறகு ராஜ்கோட் சட்டப்பேரவை உறுப்பினர் வஜுபாய் வாலா ராஜினாமா செய்தார். இந்தத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு, சட்டப்பேரவைக்குத் தேர்வானார் மோடி.

மோடி தலைமையிலும் பாஜக பெரும் பின்னடைவையே எதிர்கொண்டது. கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, குஜராத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தார்கள். வன்முறையைக் கட்டுப்படுத்த மோடி தலைமையிலான குஜராத் அரசு தவறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மனித உரிமை காரணங்களுக்காக மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்தது. மோடி பதவி விலக வேண்டும் என கட்சிக்குள்ளேயே குரல்கள் எழுந்தன. இவர்களில் முக்கியமானவர் வாஜ்பாய்.

ஆட்சி முடிவடைய 8 மாத காலம் இருந்தது. திடீரென ஆட்சியைக் கலைத்து தேர்தலை எதிர்கொண்டது மோடி தலைமையிலான பாஜக. 2002 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 127 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்பிறகு மோடியின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் மேலேறி சென்றுகொண்டே இருந்தார்.

குஜராத்தை முன் எப்போதும் இல்லாத வகையில் தொழில் வளர்ச்சி மிகுந்த மாநிலமாக மாற்றினார் மோடி. குஜராத் மாடல் எனும் சொற்றொடரை இந்திய அரசியலுக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஒரு மாநிலம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்குப் பாடமாக குஜராத் மாடல் இருக்கிறது என்றும் பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டன.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் குறியாக இருந்த மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் மோடி. பெரும் தொழில் புரட்சி நிகழ்ந்ததாக வர்ணிக்கப்படும் குஜராத்தில், பொருளாதார வளர்ச்சி 2004 மற்றும் 2012 காலகட்டத்தில் சராசரியாக 10% என விரிவடைந்தது. தேசிய சராசரியான 8.25-ஐ விட கூடுதல் வளர்ச்சி! இதனால் 2007 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் வலிமையுடன் களம் கண்டு வெற்றி பெற்றார். மோடி குறித்து சோனியா காந்தி வைத்த காட்டமான விமர்சனங்கள் எதுவும் தேர்தலில் எதிரொலிக்கவில்லை.

2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, குஜராத்தில் தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் வெற்றி கண்டதும் குஜராத்தை வளர்ச்சி மிகுந்த மாநிலமாக மாற்றியதும் மோடியைத் தேசிய முகமாக மாற்றியது. பாஜகவின் முகங்களில் ஒருவரான வாஜ்பாய் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு நெருக்கமான வயதைக் கொண்டிருந்த அத்வானியும், வயதுமூப்பு காரணமாக பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் இருக்க மாட்டார் என்பது ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது. அடுத்த தலைமுறையினரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதால், பாஜகவில் முதல் தேர்வாக இருந்தவர் நரேந்திர மோடி.

மறுபுறம், மோடிக்கு நிகராக ஈடுகொடுக்க காங்கிரஸ் கட்சி தடுமாறிக் கொண்டிருந்தது. 2ஜி ஊழல் குற்றச்சாட்டுகளும் அன்னா ஹசாரே உண்ணாவிரதமும் காங்கிரஸுக்கு எதிரான பெரும் அலையை உருவாக்கின.

எல்லோரது மனதிலும் மாற்றம் தேவை என்கிற எண்ணம் விதைக்கப்பட்டது. இந்தச் சூழலை மிகக் கச்சிதமாக அறுவடை செய்தார் மோடி.

முந்தைய தேர்தல்களில் இல்லாத வகையில் பாஜக அதுவரையில் கண்டிராத ஒரு வெற்றி 2014-ல் அவர்களுக்குக் கிடைத்தது. பாஜக மட்டுமே 282 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. பாஜக வென்ற 282 இடங்களில் 193 இடங்கள் ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவை. தேசிய ஜனநாயகக் கூட்டணி 336 இடங்களில் வென்றது.

குஜராத்தின் வதோதரா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் வென்றார் மோடி. இந்தியத் தேர்தல் அரசியலில் உத்தரப் பிரதேசம் மிக முக்கியமானப் புள்ளி. உத்தரப் பிரதேசத்தில் வெற்றி கிடைத்தால் தேசிய அளவில் வெற்றி பெற்றுவிடலாம். கூடுதலாக, வாரணாசி மிகவும் பழமையான நகரம். ஆன்மிகத்துடன் ஒன்றிணைந்த நகரம். இறுதியில் வதோதரா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து வாரணாசியை மோடி தக்கவைத்துக் கொண்டார்.

ஹிந்துத்துவம், தேசியவாதம், நாட்டின் வளர்ச்சி - இந்த மூன்றும் மோடி தலைமையிலான பாஜக அரசின் எழுதப்படாத முழக்கமாக இருந்தது. மோடி ஆட்சியில் நாட்டின் உள்கட்டமைப்பு மாற்றம் அடைந்து வந்தாலும், இவருடைய ஆட்சியும் விமர்சனங்களைச் சந்தித்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட விதம் பொருளாதாரப் பிரச்னைகளாக விமர்சிக்கப்பட்டன.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பிப்ரவரியில் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இச்சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் இருந்த ஜெய்ஷ்-ஏ-முஹமது பயங்கரவாத முகாம்களை வான்வழித் தாக்குதல் மூலம் இந்தியா தாக்கி அழித்தது. பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று பொதுமக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாமல் பயங்கரவாத முகாம்கள் மட்டும் அழிக்கப்பட்டது இந்தியாவின் பெரும் சாதனையாகப் பார்க்கப்பட்டது. இது பாஜகவுக்கு மறைமுக தேர்தல் அறுவடையாக மாறியது.

இதுபோன்ற கடைசி நேர நிகழ்வுகள் பாஜகவுக்குச் சாதகமானதாக மாறி, பாஜக அலை நாடு முழுக்க மீண்டும் வீசியது. 2019 தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில்லாமையும் மோடிக்கு கூடுதல் சாதகமான அம்சமாக அமைந்தது. 2019 தேர்தலில் பாஜக மட்டும் தனித்து 303 இடங்களை வென்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 354 இடங்களில் வென்று சாதனை படைத்தது. 1971-க்குப் பிறகு முதல்முறையாக தொடர்ந்து இருமுறை ஒரு கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது இதுவே முதல்முறை.

2-வது வெற்றி, கூடுதல் இடங்கள் பாஜகவுக்கு ஒரு தெம்பைக் கொடுத்தன. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது போன்ற அதிரடி நடவடிக்கைகளை, விமர்சனங்களையும் மீறி துணிச்சலாக செய்து முடித்தது. .

கொரோனாவுக்குப் பிறகு எந்த நாடும் காணாத அளவுக்கு வேகமாக வளர்ச்சியைக் கண்டது இந்தியா மட்டும்தான். உலகப் பொருளாதாரத்தில் தற்போது ஜப்பானையும் பின்னுக்குத் தள்ளி 2025-ல் நான்காவது இடத்தில் உள்ளது இந்தியா.

90களில் இருந்து ராமர் கோவில் விவகாரம் பாஜகவின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்றைய பாஜகவின் நீண்ட நாள் சத்தியம் நிறைவேறியது.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியினர் இண்டியா கூட்டணி என ஒற்றுமையுடன் தேர்தல் களத்தைக் கண்டு மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கடும் சவால் அளித்தார்கள். இருமுறை அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாஜக 2024 தேர்தலில் 240 இடங்களில் மட்டுமே வெற்றி கண்டது. பெரும்பான்மைக்குத் தேவையானதைவிட 32 இடங்கள் குறைவு. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களிலும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 16 இடங்களிலும் வெற்றி பெற்றது கூட்டணி ஆட்சியை அமைக்க பாஜகவுக்கு உதவியது.

உலக நாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்வது மோடியின் வழக்கம். செல்லும் நாடுகளிலெல்லாம் அந்நாட்டுத் தலைமையுடன் நல்லுறவைப் பேணிக் காப்பது மோடியின் ஸ்டைல். சம்பந்தப்பட்ட நாடுகளும் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்து வருகின்றன. மேலும், பாலஸ்தீன் பிரச்னையில் இந்தியா எடுக்கும் நிலைப்பாடு, உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு உள்ளிட்டவை இந்தியா மீது நன்மதிப்பைப் பெற்றுத் தந்துள்ளன. வரி விதிப்பில் இந்தியா - அமெரிக்கா இடையே பிரச்னை இருந்தாலும், மோடியைத் தனது நண்பர் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிடுகிறார். அந்தளவுக்கு உலக நாடுகள் மத்தியில் செல்வாக்கை சம்பாதித்துள்ளார் மோடி.

மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்று, அதிக நாள்கள் பிரதமராக இருக்கும் காங்கிரஸ் அல்லாத ஒருவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார் பிரதமர் மோடி. 75 வயதுக்குப் பிறகும் அவருடைய அரசியல் வாழ்க்கை சீராகச் சென்றுகொண்டிருக்கிறது. இந்திய அரசியலில் இன்னும் என்னென்ன தாக்கங்களை அவர் ஏற்படுத்தப் போகிறார்? பார்க்கலாம்.

Narendra Modi | PM Modi | Modi Birthday |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in