
இன்று தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடும் மோடி என்ன மாயாஜாலம் செய்து இப்படியொரு மோடி ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தார்?
குஜராத் மாநிலம் வத் நகர் என்கிற சிறிய கிராமத்தில் 1950-ல் பிறந்தார் நரேந்திர மோடி. பி.என். உயர்நிலைப் பள்ளியில் படித்தார். சிறு வயதில் புத்தகங்கள் வாசிப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார் மோடி. மேலும் நாடகங்களில் நடிப்பதிலும் ஈடுபாடு காண்பித்தார். சுவாமி விவேகானந்தரைப் பற்றி படித்த பிறகு இமயமலைக்குச் செல்லவேண்டும் என்கிற ஆர்வம் அச்சிறு வயதில் மோடிக்கு ஏற்பட்டது. வீட்டை விட்டுக் கிளம்பிய மோடி, அடுத்த இரு வருடங்கள் வீட்டுக்கே திரும்பவில்லை. ஒருவழியாகத் தனது ஆன்மிகத் தேடலை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினார். அப்போதும் அவர் குடும்பத்துடன் இணைந்து வாழ விரும்பவில்லை.
1967-ல் ஊரை விட்டுக் கிளம்பி அஹமதாபாதுக்குச் சென்றார் மோடி.
பதின்ம வயதில் அஹமதாபாத்துக்கு வந்த மோடி, ஆரம்பத்தில் பாரதிய ஜனசங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். பிறகு அதன் சகோதர அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்துகொண்டார். 1972-ல் ஆர்எஸ்எஸ் பிரசாரக் ஆனார் மோடி. கூட்டங்கள் நடத்துவது, ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கங்களை மக்களிடத்தில் விளக்கும் உள்ளிட்ட பொறுப்பு அவரிடம் வழங்கப்பட்டது.
ஆர்எஸ்எஸ் மற்றும் ஜன சங்கத்தின் முன்னணி தலைவர்களின் அறிமுகத்தைப் பெற்றார். தனது துடிப்பான செயல்பாடுகள் அவர்களது நன்மதிப்பையும் சம்பாதித்தார். இவர்களில் முக்கியமானவர், பாஜகவை நிறுவியவர்களுள் ஒருவரான எல்.கே. அத்வானி.
மோடியை ஆர்எஸ்எஸ்-ல் இருந்து பாஜகவுக்கு அழைத்துச் சென்றவர் அத்வானி.
1987-ல் அஹமதாபாத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் பிரசாரத்தைத் திட்டமிட்டு வழிநடத்தியவர் மோடி. விளைவு, உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி கண்டது.
இதற்குப் பரிசளிக்கும் விதமாக, குஜராத் பாஜகவில் மோடியை அமைப்புச் செயலாளர், பொதுச்செயலாளர் பதவிகளில் அமரவைத்து அழகு பார்த்தார் அத்வானி. 1990-களுக்குப் பிறகு தேசிய அரசியலிலும் ஒரு வலம் வந்த மோடி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவின் மேலிடப் பொறுப்பாளராகச் செயல்பட்டார்.
1995-க்குப் பிறகு குஜராத் அரசியலுக்கு மீண்டும் திரும்பினார் மோடி. குஜராத்தில் 1995-ல் கேஷுபாய் படேல் தலைமையிலான பாஜக ஆட்சி உள்ளாட்சித் தேர்தல் தோல்விகள், உள்கட்சி கோஷ்டிப் பூசல்கள் உள்ளிட்ட காரணங்களால் இறங்கு முகத்தில் இருந்தது. குறிப்பாக, 2001-ல் குஜராத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக தோல்வி கண்டது.
நிலைமையை உணர்ந்து சுதாரித்துக் கொண்ட பாஜக தலைமை, குஜராத் முதல்வராக இருந்த கேஷுபாய் படேலை தில்லிக்கு அழைத்து பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டது.
மூழ்கும் கப்பலை மீட்டெடுக்கும் பணி பாஜகவின் அப்போதைய தேசியச் செயலராக இருந்த மோடியிடம் வழங்கப்பட்டது. இத்தனைக்கும் மோடி அதுவரை ஒரு தேர்தலைக்கூட சந்தித்தது கிடையாது. நேராக குஜராத் முதல்வர் பதவி அவர் மடியில் வந்து விழுந்தது. முதல்வரான பிறகு இடைத்தேர்தலில் போட்டியிட்டு, சட்டப்பேரவைக்குத் தேர்வானார் மோடி.
மோடி தலைமையிலும் பாஜக பெரும் பின்னடைவையே எதிர்கொண்டது. கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, குஜராத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தார்கள். வன்முறையைக் கட்டுப்படுத்த மோடி தலைமையிலான குஜராத் அரசு தவறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
ஆட்சி முடிவடைய 8 மாத காலம் இருந்தது. திடீரென ஆட்சியைக் கலைத்து தேர்தலை எதிர்கொண்டது மோடி தலைமையிலான பாஜக. 2002 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 127 இடங்களில் வெற்றி பெற்றது.
குஜராத்தை முன் எப்போதும் இல்லாத வகையில் தொழில் வளர்ச்சி மிகுந்த மாநிலமாக மாற்றினார் மோடி. குஜராத் மாடல் எனும் சொற்றொடரை இந்திய அரசியலுக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஒரு மாநிலம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்குப் பாடமாக குஜராத் மாடல் இருக்கிறது என்றும் பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டன.
இதனால் 2007 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் வலிமையுடன் களம் கண்டு வெற்றி பெற்றார்.
2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, குஜராத்தில் தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் வெற்றி கண்டதும் குஜராத்தை வளர்ச்சி மிகுந்த மாநிலமாக மாற்றியதும் மோடியைத் தேசிய முகமாக மாற்றியது. பிரதமர் வேட்பாளராக வாஜ்பாய், அத்வானிக்கு அடுத்து ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற நிலையில், பாஜகவில் முதல் தேர்வாக இருந்தவர் நரேந்திர மோடி.
மறுபுறம், மோடிக்கு நிகராக ஈடுகொடுக்க காங்கிரஸ் கட்சி தடுமாறிக் கொண்டிருந்தது. 2ஜி ஊழல் குற்றச்சாட்டுகளும் அன்னா ஹசாரே உண்ணாவிரதமும் காங்கிரஸுக்கு எதிரான பெரும் அலையை உருவாக்கின.
எல்லோரது மனதிலும் மாற்றம் தேவை என்கிற எண்ணம் விதைக்கப்பட்டது. இந்தச் சூழலை மிகக் கச்சிதமாக அறுவடை செய்தார் மோடி.
பாஜக மட்டுமே 282 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 336 இடங்களில் வென்றது.
குஜராத்தின் வதோதரா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் வென்றார் மோடி. இறுதியில் வதோதரா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து வாரணாசியை மோடி தக்கவைத்துக் கொண்டார்.
ஹிந்துத்துவம், தேசியவாதம், நாட்டின் வளர்ச்சி - இந்த மூன்றும் மோடி தலைமையிலான பாஜக அரசின் எழுதப்படாத முழக்கமாக இருந்தது.
2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கடைசி நேர நிகழ்வுகள் பாஜகவுக்குச் சாதகமானதாக மாறி, பாஜக அலை நாடு முழுக்க மீண்டும் வீசியது. 2019 தேர்தலில் பாஜக மட்டும் தனித்து 303 இடங்களை வென்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 354 இடங்களில் வென்று சாதனை படைத்தது.
2-வது வெற்றி, கூடுதல் இடங்கள் பாஜகவுக்கு ஒரு தெம்பைக் கொடுத்தன.
கொரோனாவுக்குப் பிறகு எந்த நாடும் காணாத அளவுக்கு வேகமாக வளர்ச்சியைக் கண்டது இந்தியா மட்டும்தான். உலகப் பொருளாதாரத்தில் தற்போது ஜப்பானையும் பின்னுக்குத் தள்ளி 2025-ல் நான்காவது இடத்தில் உள்ளது இந்தியா.
இருமுறை அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாஜக 2024 தேர்தலில் 240 இடங்களில் மட்டுமே வெற்றி கண்டது. பெரும்பான்மைக்குத் தேவையானதைவிட 32 இடங்கள் குறைவு. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களிலும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 16 இடங்களிலும் வெற்றி பெற்றது கூட்டணி ஆட்சியை அமைக்க பாஜகவுக்கு உதவியது.
உலக நாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்வது மோடியின் வழக்கம். செல்லும் நாடுகளிலெல்லாம் அந்நாட்டுத் தலைமையுடன் நல்லுறவைப் பேணிக் காப்பது மோடியின் ஸ்டைல். சம்பந்தப்பட்ட நாடுகளும் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்து வருகின்றன.
மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்று, அதிக நாள்கள் பிரதமராக இருக்கும் காங்கிரஸ் அல்லாத ஒருவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார் பிரதமர் மோடி. 75 வயது வரை அவருடைய அரசியல் வாழ்க்கை சீராகச் சென்றுகொண்டிருக்கிறது. இந்திய அரசியலில் இன்னும் என்னென்ன தாக்கங்களை அவர் ஏற்படுத்தப் போகிறார்? பார்க்கலாம்.
Narendra Modi | PM Modi | Modi Birthday |