
ஜம்மு காஷ்மீரின் காந்தர்பால் மாவட்டத்தில் நேற்று (அக்.20) நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் ஒரு மருத்துவர் உள்ளிட்ட ஏழு நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் கிளை அமைப்பான `எதிர்ப்பு முன்னணி’ காஷ்மீர் பகுதியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஒன்றரை வருடங்களாக காஷ்மீரில் பகுதியில் வசித்து வரும் வெளி மாநிலத்தவரையும், சீக்கியர்களையும், காஷ்மீர் ஹிந்துக்களை இலக்காக வைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீ நகருக்கு வடக்கே உள்ள காந்தர்பால் மாவட்டத்தின் சோனாமார்கில் ஸி-மோர்ஹ் சுரங்கப்பாதை கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமானப் பகுதியில் நேற்று (அக்.20) தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில், ஷானவாஸ் என்ற மருத்துவரும், 6 வெளி மாநில பணியாளர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் 5 பேர் காயமடைந்தனர்.
எதிர்ப்பு முன்னணி தீவிரவாத அமைப்பின் தலைவரான ஸ்ரீ நகரைச் சேர்ந்த ஷேக் சஜத் குல் இந்த தாக்குதலின் மூளையாக செயல்பட்டுள்ளார். தேடப்படும் தீவிரவாதியான இவரை கைது செய்வதற்கு துப்பு வழங்கினால் ரூ. 10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என 2022-ல் அறிவித்துள்ளது தேசிய புலனாய்வு முகமை.
மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவுற்றபிறகு பொதுவெளியில் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இந்த தீவிரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளதாக இந்தியா டுடே செய்து வெளியிட்டுள்ளது. 2019-ல் நடந்த ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புக்குப் பிறகு இவ்வளவு பெரிய அளவில் தீவிரவாத தாக்குதல் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.