

அஸ்ஸாமில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 7 யானைகள் உயிரிழந்தன. ரயில் தடம்புரண்ட நிலையில் பயணிகள் பலத்த காயமின்றி மீட்கப்பட்டனர்.
மிசோரம் தலைநகர் ஐஸ்வால் அருகில் உள்ள சைராங்-கில் இருந்து தில்லிக்குப் புறப்பட்ட ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், இன்று அதிகாலை 2.17 மணிக்கு அஸ்ஸாமின் ஹோஜாய் மாவட்டத்தில் உள்ள சாங்ஜுராய் என்ற கிராமத்தில் யானைக் கூட்டத்தின் மீது மோதியது. இதில், 7 யானைகள் உயிரிழந்தன, ஒரு யானை காயமடைந்தது. காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த விபத்தில் ரயிலின் ஐந்து பெட்டிகளும் இன்ஜினும் தடம்புரண்டன. எனினும், பயணிகளுக்குக் காயம் ஏற்படவில்லை.
இதற்கிடையில், விசாரணை மேற்கொண்ட வனத்துறை அதிகாரிகள், பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்றும், உயிரிழந்த ஏழு யானைகளின் உடல்கள் விபத்து நடந்த பகுதிக்கு அருகிலேயே தகனம் செய்யப்பட்ம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இவ்விபத்து தொடர்பாக ரயில்வே தலைமை செய்தித் தொடர்பாளர் கபின்ஜல் கிஷோர் சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
“அதிகாலை 2:30 மணியளவில், சைய்ராங்கிலிருந்து ஆனந்த் விஹார் செல்லும் வழியில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் நெருங்கிக்கொண்டிருந்தபோது, ரயில் தண்டவாளங்களைக் கடக்கும் சுமார் 100 யானைகள் கூட்டத்தை ரயில் ஓட்டுநர் கண்டு உடனே அவசரகால பிரேக்குகளை இயக்கியுள்ளார். ஆனாலும் சில யானைகள் ரயிலில் மோதின. இதில் ரயிலின் இன்ஜின் மற்றும் சில பெட்டிகள் தடம்புரண்டாலும், பயணிகள் யாரும் காயமடையவில்லை. இந்த விபத்து யானைகள் கடந்து செல்லும் பாதையாக அறிவிக்கப்படாத ஒரு இடத்தில் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெட்டிகளில் இருந்த பயணிகள் மற்ற பெட்டிகளில் உள்ள காலி இருக்கைகளுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டனர். தடம் புரண்ட பெட்டிகள் இல்லாமல் ரயில் இன்று காலை 6.11 மணிக்கு ரயில் புறப்பட்டது” என்றார்.
7 elephants killed after being hit by an express train in Assam. Passengers rescued without serious injuries after train derails.