
உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற திருவிழாவில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மேடை சரிந்து பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் உள்ள பரௌட் நகரில் இருக்கும் திகம்பர் ஜெயின் கல்லூரியில் வைத்து, சமண துறவி ஆதிநாத்துக்கு லட்டு ஊட்டும் நிகழ்வை அப்பகுதியில் வாழும் ஜெயின் சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்வுக்காக மரக்கட்டைகளை உபயோகித்து சுமார் 65 அடியில் தற்காலிக மேடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி அளவில் இந்த மேடை சரிந்து அதில் நின்றுகொண்டிருந்த அனைவரும் கீழே விழுந்தார்கள். இதனால் 5 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாக்பத் மாவட்ட ஆட்சியர் அஸ்மிதா லால், `இன்று ஜெயின் சமூகத்தினர் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள். கடந்த 30 ஆண்டுகளாக இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் மரத்தினாலான மேடை சரிந்ததில் 40 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறும் வகையில், அனைவரும் 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு 20 பேர் வீடு திரும்பியுள்ளனர். 20 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 5 பேர் இதில் உயிழந்துள்ளனர்’ என்றார்.
சம்பவத்தைக் கேள்விப்பட்ட உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த நிகழ்வில் காயமுற்ற அனைவருக்கும் தேவைப்படும் உதவிகளை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.