அலட்சியத்தால் பறிபோகும் மனித உயிர்கள்!

கடந்த இரு வாரங்களில் மட்டும் செய்திகளில் வந்த கணக்குப்படி 65 உயிர்கள் பறிபோயுள்ளன.
ராஜ்கோட் தீ விபத்து
ராஜ்கோட் தீ விபத்து

கடந்த இரு வாரங்களில் மட்டும் மனிதர்களின் அலட்சியப் போக்கால் 65 உயிர்கள் பறிபோயுள்ளன என்றால் நம்ப முடிகிறதா?. ஆனால் அதுதான் உண்மை. துயரங்கள் மனிதர்களைச் சுற்றி சுழற்றியடிக்கிறது.

மும்பையில் கடந்த 13 அன்று பலத்த புழுதிக் காற்றுடன் கனமழை பெய்தது. இதில் கட்கோபர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ராட்சத விளம்பரப் பலகை சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தார்கள்.

இந்த விளம்பரப் பலகையை, ஒரு விளம்பரப் பட நிறுவனத்தின் இயக்குநர் பாவேஷ் பிண்டே என்பவர் பராமரித்து வந்துள்ளார். விளம்பரப் பலகை சரிவால் 17 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பாவேஷ் பிண்டே தலைமறைவானார். மே 16-ல் ராஜஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்ட இவரை மே 26 வரை காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறைக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்தக் காவலானது தற்போது மே 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த விளம்பரப் பலகையை வைக்க, பாவேஷ் பாண்டேவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இவருடைய இந்த அலட்சியம், இந்த விதிமீறலைக் கண்டுகொள்ளாத உரிய அதிகாரிகளின் அலட்சியத்தின் விலை 17 உயிர்கள்.

ஒரு குடும்பத்தின் அலட்சியம்:

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றதைக் கொண்டாடுவதற்காக 17 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கேளிக்கை விடுதிக்குச் சென்றுள்ளார்.

18 வயது நிரம்பாத சிறுவனிடம் சொகுசு காரை ஒப்படைத்து பெற்றோர்கள் செய்த செயல் முதல் அலட்சியம்.

மஹாராஷ்டிரத்தில் 25 வயதுக்குக் குறைவானவர்கள் மது அருந்த அனுமதியில்லை. இருந்தபோதிலும், அவர் சென்ற கேளிக்கை விடுதியில் அவருக்கு மது வழங்கப்பட்டுள்ளது. இது இரண்டாவது அலட்சியம்!

மது அருந்திய பிறகு நண்பர்களுடன் சொகுசு காரை ஓட்ட சிறுவன் முடிவெடுத்தது மூன்றாவது அலட்சியம்! மது அருந்திவிட்டு குறுகிய சாலையில் அதிகவேகமாக காரை இயக்கியது, நான்காவது அலட்சியம்! அலட்சியங்களின் விளைவு, இரு சக்கர வாகனத்தில் சென்ற ஐடி ஊழியர்கள் இருவர் மீது கார் மோதியது. ஐடி ஊழியர்கள் இருவரும் உயிரிழந்தார்கள்.

இரு உயிர்கள் பறிபோன பிறகும், சிறுவனின் குடும்பத்தினர் தவறை உணரவில்லை. சிறுவனின் தந்தை முன்னணி ரியல் எஸ்டேட் அதிபர். இவர்களுடைய அதிகாரப் பலத்தால், கைது செய்யப்பட்ட 15 மணி நேரத்தில் சிறுவனுக்குப் பிணை வழங்கப்பட்டது. அதுவும் சாலைப் போக்குவரத்து குறித்து 300 வார்த்தைகளில் ஒரு கட்டுரை வேண்டும் என்பதுதான் அவருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை.

இந்தச் சம்பவம் பூதாகரமானதைத் தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய சிறுவன், சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டார். சிறுவனின் தந்தை நீதிமன்றக் காவலில் மத்திய சிறையில் உள்ளார்.

இவற்றுக்கு மத்தியில் தங்களுடையக் குடும்ப ஓட்டுநரை வற்புறுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு சிறுவனின் தாத்தா மிரட்டியுள்ளார். சிறுவனின் தாயாரும் உணர்வுப்பூர்வமாக அணுகி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. ஓட்டுநரை மிரட்டிய புகாரில் சிறுவனின் தாத்தாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்களுடைய அதிகார பலம் அரசு மருத்துவர் வரை நீண்டுள்ளது. மது அருந்திய சிறுவனின் ரத்த மாதிரிகள் மருத்துவ அறிக்கைக்குப் பதிலாக மது அருந்தாத ஒருவரின் ரத்த மாதிரிகள் மருத்துவ அறிக்கையை மாற்றி வைத்த குற்றச்சாட்டில் அரசு மருத்துவர்கள் இருவர் இன்று கைது செய்யப்பட்டார்கள். அலட்சியங்களால் இரு உயிர்கள் பறிபோனதை சற்றும் உணராமல், விபத்துக்குப் பிறகும் இத்தனை நாடகங்கள் அரங்கேறியுள்ளன.

ஒரேநாளில் அடுத்தடுத்து இரு தீ விபத்து சம்பவங்கள்:

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் விளையாட்டு மையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 28 பேர் உயிரிழந்துள்ளார்கள். 9 பேர் காயமடைந்துள்ளார்கள்.

இந்த விளையாட்டு மையம் செயல்படுவதற்கு தீயணைப்புத் துறையிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறப்படவில்லை.

விளையாட்டு மையத்தின் உரிமையாளர் யுவ்ராஜ்சின் சோலங்கி, மேலாளர் நிதின் ஜெயின் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்கள். மற்றொரு உரிமையாளரும் மூன்றாவது குற்றவாளியுமான ராகுல் ரத்தோட் என்பவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டுச் சென்றார் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல். இதன்பிறகு, விபத்துக்குக் காரணமான 7 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டார்கள்.

28 உயிர்கள் பறிபோனதைத் தொடர்ந்து, குஜராத் உயர் நீதிமன்றம் இதுதொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக இரு விளையாட்டு மையங்கள் உரிய அனுமதி இல்லாமல் இயங்கி வந்திருப்பதை அறிந்த குஜராத் நீதிமன்றம், மாநில அரசை இனி நம்பப்போவதில்லை எனக் கடுமையாக சாடியது. அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்படுவதும், குஜராத் உயர் நீதிமன்றம் மாநில அரசைக் கடிந்துகொள்வதும் 28 உயிர்கள் போன பிறகு நடக்கிறதுந்துள்ளன.

6 பச்சிளங் குழந்தைகளின் உயிர்களைப் பறித்த அடுத்த அலட்சியம்:

தில்லியின் விவேக் விஹார் பகுதியில் குழந்தைகளுக்கான பிரத்யேக மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 6 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

தீ விபத்து நேர்ந்த குழந்தைகள் நல மருத்துவமனையின் உரிமம் மார்ச் 31-ம் தேதியுடன் காலாவதியாகியுள்ளது. உரிமத்தின்படி மருத்துவமனையில் 5 படுக்கை வசதிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், விபத்து நேர்ந்த சமயத்தில் புதிதாகப் பிறந்த 12 குழந்தைகள் மருத்துவமனையில் இருந்துள்ளன. மருத்துவர்கள் முறையான தகுதியைப் பெற்றவர்கள் அல்ல. அவசர காலத்தில், மருத்துவமனையிலிருந்து விரைவில் வெளியேறுவதற்கான அவசர வழி என்று எதுவும் மருத்துவமனையில் கிடையாது. மருத்துவமனையில் இத்தனை விதிமீறல் இருப்பதைக் கண்டறிய 6 பச்சிளங் குழந்தைகளின் உயிர்களைக் காவு வாங்கியுள்ளோம்.

இந்த மருத்துவமனையின் இயக்குனர் மற்றும் பணியிலிருந்த மருத்துவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல் துறை தரப்பில் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

உ.பி. சாலை விபத்தில் 12 பேர் உயிரிழப்பு:

ராஜ்கோட், தில்லி சோகங்களுக்கு மத்தியில் உத்தரப் பிரதேசத்தில் ஒரு சோகம் நிகழ்ந்தது.

தனியார் பேருந்து ஒன்று 59 பயணிகளுடன் உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள பூர்ணகிரி கோயில் நோக்கி சென்றுகொண்டிருந்தது. ஷாஜகான்பூர் மாவட்டத்தில் ஹஜியாபூர் என்ற கிராமத்தில் சாப்பிடுவதற்காக பேருந்தை சாலையோரத்தில் நிறுத்தியுள்ளார்கள். சிலர் தாபாவுக்கு சாப்பிடச் செல்ல, சிலர் பேருந்தில் இருந்தார்கள். அப்போது ஜல்லியை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இந்தப் பேருந்து மீது மோதி கவிழ்ந்தது. இதில் பேருந்திலிருந்தவர்களில் 12 பேர் உயிரிழந்தார்கள். இந்த விபத்து யாருடைய அலட்சியத்தால் நேர்ந்தது என்பது விசாரணையில்தான் தெரியவரும்.

கடந்த இரு வாரங்களில் ஊடகங்களில் பெரிய கவனத்தை ஈர்த்த இந்தச் சம்பவங்கள் மூலம் உயிரிழந்தவர்கள் மட்டும் 65. வெளிச்சத்துக்கு வராமல் புதைந்த செய்திகளும், உயிர்களும் எத்தனையோ..

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in