மத்திய அரசின் கீழ் இயங்கும் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள 50-க்கும் மேலான மாத்திரைகள் தரமற்றவை என்பது தெரியவந்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில் உயர் ரத்த அழுத்தம், அஜீரணக் கோளாறு, கால்சியம்-வைட்டமின் குறைபாடு, சர்க்கரை வியாதி உள்ளிட்ட நோய்களுக்கு பொதுமக்கள் உபயோகித்துவரும் 53 மாத்திரைகள் தரமற்றவை என்பது தெரிய வந்துள்ளது.
பொதுச் சந்தையில் மக்கள் பயன்பாட்டுக்காகக் கிடைக்கும் அத்தகைய மாத்திரைகளைப் பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு. இதன்படி வைட்டமின் சி, வைட்டமின் டி3 குறைபாட்டுக்கான ஷெல்கால், antiacid Pan-D, சர்க்கரை நோய்க்கான Glimepiride, உயர் ரத்த அழுத்ததுக்கான Telmisartan உள்ளிட்ட மாத்திரைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
மேலும் வயிறு தொற்று பிரச்னைக்கான metronidazole, ஆன்டிபயாடிக் மாத்திரையான Clavam 625, Pan D, பொதுமக்கள் வெகு சாதாரணமாகப் பயன்படுத்தும் கர்நாடகா ஆன்டிபயாடிக்ஸ் மற்றும் பார்மசூட்டிக்கல் நிறுவனத்தின் பாராசிட்டமால் போன்ற மாத்திரைகளின் தரத்தில் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இந்தியாவில் விற்கப்படும் மருந்துகளுக்கு ஒப்புதல் வழங்குவதும், மருந்துகளுக்கான பரிசோதனைகளை மேற்பார்வையிடுவதும், தகுந்த கால இடைவெளியில் மருந்துகளின் மாதிரிகளை சோதனையிடுவதும், மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் பணியாகும்.