

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் வெற்றிக் கொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்றதைக் கொண்டாடும் விதமாக இன்று பெங்களூரு வந்தது. முதலில் விதான் சௌதா சென்று முதல்வர் சித்தராமையாவைச் சந்தித்தார்கள். அங்கு முதல்வர் சித்தராமையா மற்றும் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஆர்சிபி வீரர்களைக் கௌரவித்தார்கள்.
இதைத் தொடர்ந்து, ஆர்சிபி வீரர்கள் வெற்றிக் கோப்பையுடன் பெங்களூரு சின்னசாமி மைதானம் வந்தார்கள். வீரர்கள் வருகைக்காகவும் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காகவும் லட்சக்கணக்கான ஆர்சிபி ரசிகர்கள் மைதானம் வெளியே கூடினார்கள். கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரும் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். கட்டுக்கடங்காத கூட்டம் வந்ததால், காவல் துறையினர் தடுமாறினார்கள். ஆங்காங்கே லேசான தடியடியும் நடத்தப்பட்டது. மைதானம் வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தார்கள். மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தச் சம்பவம் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார்.
"வெற்றிக் கொண்டாட்டத்தில் மிகப் பெரிய துயரச் சம்பவம் நிகழ்ந்துவிட்டது. சின்னசாமி மைதானம் அருகே இது நிகழ்ந்தது. உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கான முழு சிகிச்சை செலவை அரசு ஏற்கிறது. கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளார்கள், 33 பேர் காயமடைந்துள்ளார்கள்.
இந்தப் பெருந்துயரம் நிகழ்ந்திருக்கக் கூடாது. இந்தச் சம்பவத்துக்காக கர்நாடக அரசு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தச் சம்பவத்துக்கு முட்டு கொடுக்க விரும்பவில்லை. எங்களுடைய அரசு இதில் அரசியல் செய்யாது. மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டு 15 நாள்கள் அவகாசம் வழங்கியுள்ளேன். மைதானத்தின் வாயிற்கதவுகளைக் கூட உடைத்துள்ளார்கள். கூட்டநெரிசல் ஏற்பட்டுவிட்டது. இந்தளவுக்குப் பெருங்கூட்டம் வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. மைதானத்தில் மொத்தம் 35 ஆயிரம் பேர் மட்டுமே அமர முடியும். ஆனால், 2-3 லட்சம் பேர் வந்திருந்தார்கள்.
இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடந்துள்ளன. அங்கு நடந்துள்ளது, இங்கு நடந்துள்ளது என ஒப்பிட்டுப் பேச நான் விரும்பவில்லை. கும்பமேளாவில் 50 முதல் 60 பேர் வரை உயிரிழந்தார்கள். நாங்கள் விமர்சிக்கவில்லை. காங்கிரஸ் விமர்சித்தால், விஷயம் வேறு. நானோ அல்லது கர்நாடக அரசோ விமர்சித்தோமா?" என்றார் சித்தராமையா.