மஹாராஷ்டிர மாநிலம் மும்ப்ரா ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்து 5 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
மஹாராஷ்டிர மாநிலம் தானேவில் மும்ப்ரா ரயில் நிலையம் அருகே சத்ரபதி சிவாஜி மஹாராஜ் முனையம் நோக்கி புறநகர் ரயில் சென்றுகொண்டிருந்தது. ரயிலில் அதிகளவில் கூட்டநெரிசல் இருந்ததால், கதவுகள் அருகே தொங்கியபடி பயணிகள் பயணம் செய்துள்ளார்கள்.
அப்போது எதிர்பாராத விதமாக ஓடும் ரயிலிலிருந்து 10 முதல் 12 பேர் வரை கீழே விழுந்ததாகத் தெரிகிறது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் காயமடைந்த சிலர் சிவாஜி மருத்துவமனை மற்றும் தானே சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் சார்பில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மத்திய ரயில்வே சார்பில் கூறுகையில், "ரயிலில் அதிகளவில் கூட்டம் இருந்தது விபத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது. ரயில்வே நிர்வாகம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைந்துள்ளார்கள். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். விபத்து குறித்த விசாரணை தொடங்கியுள்ளது. இந்தச் சம்பவத்தால் உள்ளூர் ரயில் சேவையும் பாதிப்பைச் சந்தித்துள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகளைப் பொறுத்துவதற்கானத் தொடக்கமாக இச்சம்பவம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.