ஹரியானா மாநிலத்தில் காலியாக உள்ள ஒப்பந்த முறையிலான தூய்மைப் பணியாளர் வேலைக்கு சுமார் 46 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநில அரசுத்துறை அலுவலகங்கள், மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளர் பணியிடங்களுக்கு ஒப்பந்த முறையிலான ஆட்சேர்ப்பு அறிவிப்பை ஹரியானா கௌஷால் ரோஜ்கார் நிகாம் நிறுவனம் வெளியிட்டது.
இந்த அறிவிப்பில் மொத்தம் எத்தனைத் தூய்மைப் பணியாளர் காலிப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் தூய்மைப் பணியாளர் வேலைக்கான மாத ஊதியமாக ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒப்பந்த முறையிலான இந்த தூய்மைப் பணியாளர் காலிப் பணியிடங்களுக்கு சுமார் 40 ஆயிரம் பட்டதாரிகள், 6 ஆயிரம் முதுகலைப் பட்டதாரிகள், 12-ம் வகுப்பை முடித்த 1.2 லட்சம் நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். தூய்மைப் பணியாளர் பணியிடங்களுக்குப் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ள செய்திக்குக் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது காங்கிரஸ் கட்சி.
`இந்த அறிவிப்பில் எத்தனை காலிப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது, அவற்றில் எவ்வாறு இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது போன்ற தகவல்கள் எதுவுமே இடம்பெறவில்லை. மாநிலத்தில் பெருகும் வேலைவாய்ப்பு பிரச்னையைத் தடுக்க பாஜக அரசு தவறிவிட்டது’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சி.