56 வருடங்களுக்கு முன் நடந்த விபத்து: 4 வீரர்களின் உடலை மீட்ட இந்திய ராணுவம்

2003-ல் அடல் பிஹாரி வாஜ்பாய் மலையேற்ற நிறுவனம் மேற்கொண்ட முயற்சியால் விமானம் விபத்துக்குள்ளான பகுதி கண்டறியப்பட்டு ஒரு வீரரின் உடல் மீட்கப்பட்டது.
56 வருடங்களுக்கு முன் நடந்த விபத்து: 4 வீரர்களின் உடலை மீட்ட இந்திய ராணுவம்
ANI
1 min read

இந்திய ராணுவத்தின் டோக்ரா ஸ்கவுட்ஸ் பிரிவினர் ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 16,000 அடி உயரத்தில் அமைந்துள்ள தாக்கா பனிப்பாறை பகுதியில் இருந்து 1968-ல் நடந்த விமான விபத்தில் உயிரிழந்த 4 வீரர்களின் உடல்களை மீட்டனர்.

கடந்த 7 பிப்ரவரி, 1968-ல் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஏ.என்-12 ரக போக்குவரத்து விமானம் சண்டிகரிலிருந்து கிளம்பி லடாக்கின் லே பகுதியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் ரோட்டாங் கணவாய்க்கு அருகே பனி படர்ந்த மலைப்பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென ரேடார் கண்காணிப்பில் இருந்து விமானம் மறைந்தது. இதைத் தொடர்ந்து இந்த விமானம் விபத்துக்குள்ளாகி, விமானத்தில் இருந்த 102 நபர்களும் மரணமடைந்தது தெரியவந்தது.

2003-ல் அடல் பிஹாரி வாஜ்பாய் மலையேற்ற நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் விமானம் விபத்துக்குள்ளான பகுதி கண்டறியப்பட்டு ஒரு வீரரின் உடல் மீட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2013 மற்றும் 2019-ல் மொத்தம் ஐந்து வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த செப்.15-ல் இந்திய ராணுவத்தின் டோக்ரா ஸ்கவுட்ஸ் பிரிவைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட ராணுவ விரர்கள், 1968-ல் விமானப்படை விமானம் விபத்துக்குள்ளான சந்திர பாகா மலைத்தொடரைச் சேர்ந்த தாக்கா பனிப்பாறைப் பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில், 1968-ல் நடந்த விமான விபத்தில் உயிரிழந்த நாராயண் சிங், மல்கன் சிங், தாமஸ் சரண், முன்ஷி ஆகியோரின் உடல் மீட்கப்பட்டது. இந்த உடல்களுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in