தொழிலாளர் சட்ட சீர்திருத்தம் அமலுக்கு வந்தது: முக்கிய அம்சங்கள் என்ன? | Labour Law |

அனைத்து வகையான பணிகளிலும் பெண்கள் இரவில் பணிபுரிய அனுமதி...
தொழிலாளர் சட்ட சீர்திருத்தம் அமலுக்கு வந்தது
தொழிலாளர் சட்ட சீர்திருத்தம் அமலுக்கு வந்தது
2 min read

இந்தியாவில் நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை நான்கு சட்டங்களாகச் சுருக்கிய சீர்திருத்தம் நேற்று (நவ. 21) முதல் அமலுக்கு வந்தது.

இந்தியாவில் தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, ஊதிய விதி 2019, தொழில்துறை தொடர்பு விதி 2020, சமூகப் பாதுகாப்பு விதி 2020 மற்றும் பணிப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிசூழல் விதி 2020 ஆகிய நான்கு சட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக 29 தொழிலாளர் சட்டங்கள் இருந்தன. அவை நான்காகச் சுருக்கப்பட்டுள்ளன.

இதில் முதன்முறையாக உணவு விநியோகம் உள்ளிட்ட துறைகளில் தற்காலிக பணிகளான ‘கிக் தொழில்’, ‘பிளாட்பாா்ம் தொழில்’ மற்றும் ‘அக்ரகேட்டர்’ (இணையவழி விநியோக நிறுவனம்) பணிகள் தொடர்பான விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டங்களுக்கு பல்வேறு தரப்பினா் மத்தியிலும் கடும் எதிா்ப்பு எழுந்துவந்த நிலையில், நேற்று (நவ.21) முதல் இச்சட்டங்கள் அமலுக்கு வந்ததாக மத்திய தொழில் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

இதுகுறித்து தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

“தொழிலாளர்களுக்கு அதிகாரமளிப்பது என்பது அதிகாரம் பெற்ற, வளமான மற்றும் சுயசார்பு இந்தியாவிற்கு அடிப்படையாக அமைகிறது. இந்தத் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கும் விதமாக, இந்தியாவில் வேலைவாய்ப்பு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டியுள்ளது. 2017–18 ல் 47.5 கோடியிலிருந்து 2023–24 ல் 64.33 கோடியாக உயர்ந்துள்ளது. ஆறு ஆண்டுகளில் 16.83 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதே காலகட்டத்தில், வேலையின்மை விகிதம் 6.0% இலிருந்து 3.2% ஆகக் கடுமையாகக் குறைந்துள்ளது. மேலும் 1.56 கோடி பெண்கள் முறையான பணிச் சூழலுக்குள் நுழைந்துள்ளார்கள். இது உள்ளடக்கிய மற்றும் நிலையான தொழிலாளர் அதிகாரமளிப்பில் அரசாங்கத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தொழிலாளர்களின் உரிமைகளை நிர்வகிக்கும் கட்டமைப்பை எளிமைப்படுத்தவும் வலுப்படுத்தவும், மத்திய அரசு 29 தொழிலாளர் சட்டங்களை நான்கு விரிவான தொழிலாளர் குறியீடுகளாக ஒருங்கிணைத்துள்ளது. அதன்படி ஊதிய விதி 2019, தொழில்துறை தொடர்பு விதி 2020, சமூகப் பாதுகாப்பு விதி 2020 மற்றும் பணிப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிசூழல் விதி 2020 ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தம், தொழிலாளர்கள் பாதுகாப்பு, கண்ணியம், சுகாதாரம் மற்றும் நலன்புரி நடவடிக்கைகளை எளிதாக அணுகுவதை உறுதி செய்கிறது. இது நியாயமான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் தொழிலாளர் சுற்றுச்சூழல் அமைப்பிற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவும், சுதந்திரத்துக்குப் பின்னும் (1930-1950) முந்தைய தொழிலாளா் சட்டங்கள் இயற்றப்பட்டன. அந்தச் சமயத்தில் நமது பொருளாதாரத்திலும் உலக அளவிலான பணிச்சூழலிலும் பல்வேறு வேறுபாடுகள் இருந்தன. அதன்பிறகு காலத்துக்கேற்ப பல நாடுகள் தங்களது தொழிலாளா் சட்டங்களில் சீா்திருத்தங்களைக் கொண்டுவந்தன. அதன் தொடா்ச்சியாக தற்போது இந்தியாவிலும் 29 தொழிலாளா் சட்டங்களில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவை நான்கு சட்டங்களாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்:-

  • அனைத்து தொழிலாளா்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கப்படுவது கட்டாயம்.

  • நிரந்தர தொழிலாளா்களுக்கு நிகராக ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கும் விடுமுறை.

  • மருத்துவ மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் நீட்டிப்பு.

  • மின்னணு ஊடகத்தில் பணிபுரியும் பத்திரிகையாளா்கள், டப்பிங் மற்றும் சண்டைப் பயிற்சிக் கலைஞா்கள் உள்பட எண்ம மற்றும் ஒலி-ஒளி சாா்ந்த தொழில்களில் ஈடுபடுபவா்களுக்கும் அனைத்து சலுகைகளும் நீட்டிப்பு.

  • அனைத்து வகையான பணிகளிலும் பெண்கள் இரவில் பணிபுரிய அனுமதி.

  • பாலின பாகுபாடின்றி சமவேலைக்கு சமஊதியம்.

  • தொழிலாளா்களுக்கு ஆண்டுதோறும் இலவச மருத்துவ பரிசோதனை.

  • சமூகப் பாதுகாப்பு விதி 2020-ன் கீழ் தற்காலிக ஒப்பந்தப் பணியாளா்கள் உட்பட அனைத்துத் தொழிலாளா்களுக்கும் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்), காப்பீடு, ஊழியா் காப்பீட்டு நிறுவன (இஎஸ்ஐசி) சலுகைகள் நீட்டிப்பு.

  • ஊதிய விதி 2019-ன் கீழ் அனைத்துத் தொழிலாளா்களும் சட்டரீதியாக குறைந்தபட்ச ஊதியம் மற்றும் உரிய நேரத்தில் ஊதிய விடுவிப்பு.

  • சுய விருப்பத்தின் அடிப்படையில் 10-க்கும் குறைவான தொழிலாளா்களைக் கொண்ட நிறுவனங்கள் இஎஸ்ஐசி சலுகைகளைப் பெற விண்ணப்பிக்கலாம். ஆனால், அபாயகரமான தொழில்களில் ஒரு தொழிலாளி ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும் அந்த நிறுவனம் இஎஸ்ஐசி சலுகைகளுக்கு விண்ணப்பிப்பது கட்டாயம்.

Summary

The Government has consolidated 29 labour laws into four comprehensive Labour Codes. The four Labour Codes include the Code on Wages, 2019, the Industrial Relations Code, 2020, the Code on Social Security, 2020 and the Occupational Safety, Health and Working Conditions Code, 2020.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in