
உத்தரகண்ட் மாநிலத்தில் இன்று (நவ.4) காலை பயணியர் பேருந்து ஒன்று பள்ளத்தாக்குள் கவிழ்ந்ததில், 36 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
இன்று (நவ.3) காலை உத்தரகண்ட் மாநிலத்தின் நய்னிதண்டாவில் இருந்து ராம்நகர் நோக்கி, 40-க்கும் மேற்பட்ட பயணிகளை சுமந்துகொண்டு பயணியர் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.
ராம்நகருக்கு 35 கி.மீ.க்கு வடக்கே மர்சுலா என்ற இடத்துக்கு அருகே, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, இந்த பயணியர் பேருந்து திடீரென பள்ளத்தாக்குக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சுமார் 9 மணி அளவில் இந்த விபத்து குறித்து அதிகாரிகளிடம் தகவல் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தால் பேருந்துக்குள் இருந்த சுமார் 36 பயணிகள் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் காயமடைந்த பயணிகள் 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அளவுக்கு மீறி அதிக பயணிகளை ஏற்றியதே, இந்த விபத்துக்குக் காரணமாக கூறப்படுகிறது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மேஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும், பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சமும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி.