கேரள மாநிலம் குருவாயூரில் இன்று ஒரே நாளில் 356 திருமணங்கள் நடைபெற்றுள்ளன.
குருவாயூர் கோயிலில் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். இந்தக் கோயிலில் முன்னெப்போதும் இல்லாத வகையில், 350-க்கும் மேற்பட்ட திருமணங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. மிகவும் முக்கியமான முகூர்த்த நாள் என்பதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருமணத்துக்கு முன்பதிவு செய்திருந்தார்கள்.
ஒரே நாளில் 350-க்கும் மேற்பட்ட திருமணம் என்பதால் குருவாயூர் தேவஸ்வம், உள்ளூர் காவல் நிர்வாகம் உள்ளிட்டோரின் ஒருங்கிணைப்பில் முன்கூட்டியே சிறப்பாகத் திட்டமிடப்பட்டிருந்தன. கூடுதலாக 100 காவலர்கள், 50 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தார்கள்.
வழக்கமாக காலை 5 மணிக்கு திருமண சடங்குகள் தொடங்கும். எண்ணிக்கை அதிகளவில் இருந்ததால் இன்று வழக்கத்துக்கு மாறாக அதிகாலை 4 மணிக்கு திருமண சடங்குகள் தொடங்கப்பட்டன. மேலும் வழக்கமாக 4 திருமண மேடைகள் அமைக்கப்பட்டிருக்கும். இன்று 6 திருமண மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
கோயிலின் தெற்குப் பகுதியில் டோக்கன் விநியோகிக்கப்பட்டன. திருமண இணையர்கள், உறவினர்கள், புகைப்படக் கலைஞர்கள் ஆகியோர் இந்தப் பகுதியின் வாயிலாக அனுமதிக்கப்பட்டார்கள். ஒரு திருமணத்துக்கு டோக்கன் அடிப்படையில் 20 பேர் அனுமதிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு திருமணத்துக்கும் சடங்குகளைச் செய்ய தலா 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன. 6 திருமண மேடைகளிலும் ஒரே நேரத்தில் திருமணங்கள் நடைபெற்றன.
திருமணத்தைத் தொடர்ந்து புதுமண தம்பதிகள் தலா ஒரு நிமிடம் வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இப்படியாக ஒரே நாளில் 356 திருமணங்களை நடத்தி குருவாயூர் கோயில் நிர்வாகம் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு, ஆகஸ்ட் 26, 2017-ல் ஒரே நாளில் 277 திருமணங்கள் நடைபெற்றது சாதனையாக இருந்தது. செப்டம்பர் 4, 2016-ல் 264 திருமணங்கள் நடைபெற்றன.