
ஜம்மு-காஷ்மீரின் கட்ராவில் உள்ள அர்த்தகுமாரிக்கு அருகே மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்குச் செல்வதற்கான யாத்திரை பாதையில் இன்று (ஆக. 27) நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி குறைந்தபட்சம் 31 பேர் உயிரிழந்தனர், 23 பேர் காயமடைந்தனர்.
நிலச்சரிவில் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், இடிபாடுகளுக்கு மத்தியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடுதல் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இடைவிடாது பெய்து வரும் அதி கனமழையால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.
ஜம்மு பிராந்தியத்தில் மின் இணைப்புகள், மொபைல் கோபுரங்கள் மற்றும் ஆற்றுப் பாலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. தொடர்ச்சியான கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் நேற்று (ஆக. 26) வரை 3,500-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இது தொடர்பாக இன்று (ஆக. 27) தன் எக்ஸ் கணக்கில் வெளியிட்ட பதிவில் முதல்வர் ஓமர் அப்துல்லா கூறியதாவது,
`கிட்டத்தட்ட இல்லாத தகவல்தொடர்புடன் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறேன். ஜியோ மொபைலில் ஏராளமான டேட்டா கிடைக்கிறது, ஆனால் வைஃபை நிலையாக இல்லை, பிரவுசிங் இல்லை, ஆப்கள் இல்லை, எக்ஸ் போன்றவை வெறுப்பூட்டும் வகையில் மெதுவாகத் திறக்கின்றன, குறுகிய குறுஞ்செய்திகளைத் தவிர பிற அனைத்திற்கும் வாட்ஸ் ஆப் சிரமப்படுகிறது.
2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளின் கொடூரமான நாள்களுக்குப் பிறகு இந்த அளவுக்குத் துண்டிக்கப்பட்டதாக நான் உணரவில்லை’ என்றார்.
கனமழை காரணமாக ஜம்மு மண்டலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இன்று (ஆக. 27) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மோசமான வானிலை காரணமாக லே விமான நிலையத்தில் விமான சேவை கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. பல விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதமாகியுள்ளன, மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.