
மஹா கும்பமேளா நடைபெறும் உ.பி. மாநிலம் பிரயாக்ராஜை சுற்றி சுமார் 300 கி.மீ. தொலைவிற்கு 48 மணி நேரமாக கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
மஹா கும்பமேளா நடைபெற்று வரும், உ.பி. மாநிலம் பிரயாக்ராஜை சுற்றி அமைந்துள்ள சித்தரகூட் சாலை, ரேவா சாலை, மிர்ஸாபூர் சாலை, வாரணாசி சாலை, சுல்தான்பூர் சாலை, ராய்பரேலி சாலை என அனைத்து புறவழிச்சாலைகளிலும் ஒட்டுமொத்தமாக சுமார் 200 முதல் 300 கி.மீ. தூரத்திற்குக் கடந்த 48 மணி நேரமாக கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
வசந்த பஞ்சமி அன்று நடைபெற்ற அமிர்த நீராடலுக்குப் பிறகு பிராயக்ராஜில் மக்கள் கூட்டம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மக்கள் கூட்டத்துடன் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. வெளியே புறவழிச்சாலைகள் மட்டுமல்லாமல், பிரயாக்ராஜ் நகருக்கு உள்ளேயும் சுமார் 7 கி.மீ. தொலைவிற்குப் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது சிரமமாக இருப்பதால், பிரயாக்ராஜை ஒட்டி அமைந்துள்ள மத்திய பிரதேச மாவட்டங்களில் இருந்து பிரயாக்ராஜிக்குள் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த சில நாட்களில் நிலைமை சீராகும் எனவும் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார் ரேவா ஐஜி சாகேத் பிரகாஷ் பாண்டே. போக்குவரத்து நெரிசலில் சிக்கி தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பக்தர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
உ.பி. அரசின் தவறான நிர்வாகத்தால் இத்தகைய குளறுபடி ஏற்பட்டுள்ளதாக ஒரு சிலரும், எத்தனை மேம்பாலங்கள் நெடுஞ்சாலைகளை அமைத்தாலும் பொதுப் போக்குவரத்தை உபயோகிக்கவில்லை என்றால் இதுதான் கதி என வேறு சிலரும் கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.